ஆகஸ்ட் 3,ஆடிப்பெருக்கு அன்று பதிவுத்துறை கூடுதல் டோக்கன்கள் வழங்கவேண்டும்

Loading

ஆடிப்பெருக்கு 2026: கூடுதல் டோக்கன்கள், சிறப்பு வசதிகள் வழங்க வேண்டும் – பதிவுத்துறை தலைவருக்கு FAIRA நிறுவனர் டாக்டர் ஆ. ஹென்றி கடிதம்

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் (FAIRA) நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி அவர்கள், எதிர்வரும் ஆகஸ்ட் 3, 2026 (திங்கட்கிழமை) நடைபெறவுள்ள ஆடிப்பெருக்கு மங்களகரமான நன்னாளை முன்னிட்டு, தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் அவர்களுக்கு முக்கிய கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

 அந்தக் கடிதத்தில், ஆடிப்பெருக்கு தினத்தில் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புதிய சொத்துக்கள் வாங்குதல், விற்பனை செய்தல், குடும்பப் பாகப்பிரிவினை, தானப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவு செய்ய அதிக ஆர்வம் காட்டுவார்கள் என்றும், இதனால் சார் பதிவாளர் அலுவலகங்களில் முன்பதிவு டோக்கன்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, பலர் ஏமாற்றத்துடனும் மனவேதனையுடனும் திரும்பிச் செல்லும் நிலை உருவாகி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

 இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்களின் நலனுக்காக தமிழ்நாடு பதிவுத்துறை உடனடியாக சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டாக்டர் ஆ. ஹென்றி அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

 அவர் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்:

 * அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் வழக்கத்தை விட கணிசமான அளவில் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்க வேண்டும்.

 * அதிகப்படியான கூட்ட நெரிசலை சமாளிக்க கூடுதல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

 * சர்வர், இணையதள சேவைகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் தடையின்றி செயல்பட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

 * முதியவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு குடிநீர், இருக்கைகள், நிழற்பந்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

 டாக்டர் ஆ. ஹென்றி அவர்கள் தனது கடிதத்தில், “இந்த நடவடிக்கைகள் பொதுமக்களின் நீண்ட நேரக் காத்திருப்பை தவிர்ப்பதோடு மட்டுமல்லாமல், அரசுக்கு முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டண வருவாயும் கணிசமாக அதிகரிக்க உதவும். எனவே, ஆடிப்பெருக்கு நன்னாளில் எந்த பொதுமக்களும் டோக்கன் கிடைக்காமல் ஏமாற்றமடையாத வகையில் பதிவுத்துறை சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

 பொதுமக்களின் உணர்வுகளுக்கும், நலனுக்கும் முன்னுரிமை அளித்து தமிழ்நாடு பதிவுத்துறை இந்த கோரிக்கையை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என FAIRA கூட்டமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது

0Shares