விடுதலை வேங்கைகள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

Loading

விடுதலை வேங்கைகள் கட்சி சார்பில் ஈரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில்
சமூக நீதிப் போராளி அய்யா ஹெச்.எம். ஜெகநாதன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, விடுதலை வேங்கைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விடுதலை வேங்கைகள் கட்சியின் தலைவர் தமிழின்பன் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். மாநில பொருளாளர் சௌந்தரராஜன் மற்றும் மாநகர தலைவர் வேங்கை நடராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழக மேற்கு மண்டல செயலாளர் சண்முகம் தொடக்க உரையாற்றினார். ஜனநாயக மக்கள் கழக தலைவர் ஏ.சி. கண்ணன் மற்றும் ஜெய்பீம் மக்கள் கட்சி தலைவர் அறிவழகன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கின்ற நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும், நீட் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேகதாது அணை கட்டுவதைத் தடை செய்ய வேண்டும் மற்றும் டெல்டா விவசாயத்திற்கு உடனடியாக நீரைத் திறந்து விட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேலும், பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் மற்றும் பட்டியலின மக்களுக்கு எதிராகச் செயல்படுவதாகக் கூறி இந்திய பிரதமர் பதவி விலக வேண்டும் என்றும், இசுலாமிய கிருத்துவர்களைத் தாய் மதம் திரும்புமாறு வற்புறுத்துவதோடு இசுலாமியர் மற்றும் பட்டியலின மக்கள் நடத்தும் மாட்டிறைச்சி வியாபாரத்தை முடக்கத் துடிக்கும் இந்து பாதுகாப்பு படையின் தேசியத் தலைவரைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்நிகழ்வில் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வேங்கை வீரமுத்து, திருப்பூர் மாவட்ட செயலாளர் மகேந்திரன், நாமக்கல் மாவட்ட நிர்வாகி சக்திவேல் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
0Shares