கிராமப்புற மக்களின் இல்லக் கனவை காக்க FAIRAஅதிரடி

Loading

“நகர்ப்புற விதிகளை கிராமங்களுக்கு திணிக்காதீர்கள் – ஏழை, எளிய மக்களின் மனை கனவை காப்பாற்றுங்கள்”

 தமிழகத்தின் கிராமப்புற ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் சொந்த வீட்டுமனை கனவை பாதுகாக்கும் நோக்கில், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர்                          டாக்டர் A. ஹென்றி அவர்கள், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையருக்கு விரிவான கொள்கை மனுவை சமர்ப்பித்துள்ளார்.

 அந்த மனுவில், நகர்ப்புறங்களுக்கு உருவாக்கப்பட்ட உள்கட்டமைப்பு விதிகளை, கிராம ஊராட்சிகளுக்கும் ஒரே மாதிரியாக கட்டாயப்படுத்துவது சமூக நீதி, பொருளாதார நியாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சியின் உண்மை நிலைக்கு எதிரானது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

 டாக்டர் A. ஹென்றி அவர்கள் கூறுகையில்: “கிராமத்தில் ஒரு சிறிய மனை வாங்குவது பல குடும்பங்களுக்கு வாழ்நாள் கனவு. அந்தக் கனவை தேவையற்ற கட்டணங்களாலும், நகர்ப்புற தரநிலைகளாலும் சிதைக்கக் கூடாது. மக்கள் வசிக்கும் இடத்திற்கு ஏற்ப விதிகள் இருக்க வேண்டும்; விதிகளுக்காக மக்கள் வாழ முடியாத நிலை உருவாகக் கூடாது.”

 கிராமத்தின் உண்மை நிலை என்ன? கிராமப்புறங்களில் மனை வாங்குபவர்கள் பெரும்பாலும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், சிறு வணிகர்கள், கால்நடை வளர்ப்போர், கூலித் தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மனை வாங்குவது உடனடியாக வீடு கட்டுவதற்காக அல்ல; மாறாக:

பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக, குடும்பப் பாதுகாப்பிற்காக, திருமணத் தேவைகளுக்காக, ஓய்வுக்கால வாழ்க்கைக்காக, சிறிய முதலீட்டாக, “ஒருநாள் சொந்த வீடு கட்ட வேண்டும்” என்ற நம்பிக்கையோடு.

 இத்தகைய சூழலில், நகர்ப்புறங்களில் போலவே திறந்தவெளிக் கழிவுநீர் கால்வாய், குடிநீர் குழாய் வலையமைப்பு, மேல்நிலை நீர்த் தொட்டி, பாதாளச் சாக்கடை, நிரந்தர வடிகால் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஆரம்பத்திலேயே கட்டாயப்படுத்துவது, மனை விலையை பல மடங்கு உயர்த்துகிறது.

 மக்களின் கனவை விலையுயர்ந்ததாக மாற்றும் நடைமுறை FAIRA சுட்டிக்காட்டியுள்ள முக்கிய அம்சங்கள்:

 தேவையற்ற உள்கட்டமைப்பு செலவுகள் அனைத்தும் மனை விலையுடன் சேர்க்கப்படுகின்றன. இதனால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு சட்டபூர்வமான மனை வாங்குவது எட்டாக்கனியாக மாறுகிறது. பயன்பாட்டிற்கு வராத கட்டமைப்புகள் பல ஆண்டுகள் பராமரிப்பின்றி சேதமடைகின்றன. பொதுப் பணமும் தனியார் முதலீடும் வீணாகின்றன. திட்டமிட்ட கிராமப்புற வளர்ச்சிக்கு பதிலாக பொருளாதார சுமை அதிகரிக்கிறது. ஒரே விதி எல்லா கிராமங்களுக்கும் பொருந்தாது

 FAIRA வலியுறுத்துவது தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளும் ஒரே தன்மையுடையவை அல்ல. அதனால், நகரத்தை ஒட்டியுள்ள Peri-Urban Village Panchayats, அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகள் வேகமாக வளர்ந்து வரும் குடியிருப்பு பகுதிகள் இவற்றுக்கு மட்டும் கூடுதல் உள்கட்டமைப்பு விதிகளை தொழில்நுட்ப ஆய்வின் அடிப்படையில் அமல்படுத்தலாம்.

 ஆனால், தொலைதூர கிராமங்கள், விவசாய கிராமங்கள், குறைந்த மக்கள் தொகை கொண்ட பகுதிகள் இவற்றுக்கு நகர்ப்புற தரநிலைகளை கட்டாயப்படுத்தக் கூடாது என்று FAIRA வலியுறுத்தியுள்ளது.

 FAIRA-வின் முக்கிய 9 கோரிக்கைகள்:

 FAIRA தனது மனுவில் அரசிடம் கீழ்க்கண்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது:

 நகர்ப்புற அரசாணை 181/2020 அனைத்து கிராமங்களுக்கும் பொருந்தாது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். நகர்ப்புற உள்கட்டமைப்பு விதிகளை கிராமங்களில் கட்டாயமாக்கும் நடைமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

 Peri-Urban Village பகுதிகளுக்கு மட்டும் தேவைக்கேற்ப கூடுதல் நிபந்தனைகள் விதிக்க வேண்டும். சாதாரண கிராமங்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் மட்டுமே போதுமானதாக இருக்க வேண்டும். மக்கள் குடியேற்றத்திற்கு ஏற்ப கட்டப்படியான உள்கட்டமைப்பு நடைமுறையை அறிமுகப்படுத்த வேண்டும். அரசு திட்டங்கள் மூலம் பின்னர் குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகளை உருவாக்க வேண்டும். அதிக கட்டணங்களுக்கு பதிலாக கிராம மக்களின் பொருளாதார நிலைக்கு ஏற்ற கட்டண முறையை வகுக்க வேண்டும். ஒப்புதல் கோப்புகளை தேவையின்றி நிலுவையில் வைக்காமல் காலக்கெடுவில் முடிவு செய்ய வேண்டும். கிராமப்புறங்களுக்கென தனித்துவமான புதிய மக்கள் நல சுற்றறிக்கையை வெளியிட வேண்டும்.

 “வீடு கட்டும் முன்பே ஆயிரக்கணக்கான கட்டணங்கள் ஏன்?” டாக்டர் A. ஹென்றி அவர்கள் மேலும் கூறியதாவது:

“மக்கள் இன்னும் குடியேறாத இடத்தில், பல லட்சம் ரூபாய் செலவில் நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குவது வளர்ச்சி அல்ல; அது பொருளாதார வீணடிப்பாகும். மக்கள் வாழத் தொடங்கும் போது தேவைக்கேற்ப அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் கட்டமைப்புகளை உருவாக்குவது தான் அறிவார்ந்த நிர்வாகம்.”

 அரசுக்கு FAIRA-வின் வேண்டுகோள் கிராமப்புற மக்களின் உண்மை நிலையை கருத்தில் கொண்டு, நகர்ப்புற விதிகளை கிராமங்களுக்கு திணிக்காமல், கிராம ஊராட்சிகளுக்கென தனித்துவமான, எளிமையான, பொருளாதார ரீதியாக சாத்தியமான, மக்கள் நலன் சார்ந்த புதிய வழிகாட்டி சுற்றறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று FAIRA வலியுறுத்தியுள்ளது.

 “காகத்திற்குக் கூட ஒரு கூடு உள்ளது; வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் எதிர்காலத்தில் ஒரு சொந்த மனை இருக்க வேண்டும். அந்தக் கனவை பாதுகாப்பது ஒரு அரசின் நிர்வாகப் பொறுப்பு மட்டுமல்ல; அது சமூக நீதிக்கான கடமையும் ஆகும்.

 கிராமப்புற மக்களின் சொந்த இல்லக் கனவை பாதுகாக்க, சட்டபூர்வமான மனை அனைவருக்கும் எட்டும் விலையில் கிடைக்க வேண்டும் என்பதே FAIRA-வின் இந்தக் கோரிக்கையின் மைய நோக்கமாகும்

0Shares