TNRERA தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ராஜினாமா

Loading

“சுயாட்சி அமைப்புகளின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்; அரசு விளக்கம் அளிக்க வேண்டும்” – FAIRA நிறுவனர் டாக்டர் ஆ. ஹென்றி வலியுறுத்தல்

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் (TNRERA) தலைவர் மற்றும் முழுநேர உறுப்பினர்கள் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள செய்திகளைப் பார்த்து மிகுந்த அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையும் அடைந்ததாக, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் (FAIRA) நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு விரிவான பிரதிநிதித்துவ மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

“தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் என்பது ஒரு சாதாரண அரசு அலுவலகம் அல்ல. இந்திய பாராளுமன்றம் இயற்றிய ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) சட்டம், 2016 (RERA Act, 2016)-ன் கீழ் உருவாக்கப்பட்டுள்ள சுயாட்சி சட்டப்பூர்வ ஒழுங்குமுறை அமைப்பாகும்.

வீடு வாங்குபவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உயர்த்துவது, ரியல் எஸ்டேட் துறையில் வெளிப்படைத்தன்மையை நிலைநிறுத்துவது மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதே இந்த ஆணையத்தின் அடிப்படை நோக்கமாகும்.

RERA சட்டத்தின் பிரிவுகள் 20, 21, 22, 23, 26 மற்றும் 27 ஆகியவை தலைவர் மற்றும் உறுப்பினர்களின் நியமனம், பதவிக்காலம் மற்றும் நீக்க நடைமுறைகளுக்கு வலுவான சட்டப் பாதுகாப்பை வழங்குகின்றன.

அவர்கள் அரசியல் அடிப்படையில் நியமிக்கப்படுபவர்கள் அல்ல; சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர்.

இத்தகைய சூழலில், தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பொதுமக்கள், வீடு வாங்குபவர்கள், கட்டுமான நிறுவனங்கள், மனை அபிவிருத்தியாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் வங்கிகள் மத்தியில் இயல்பாகவே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.

இந்த விவகாரம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நேரடி அறிவோடு (அனுமதியோடு) நடைபெற்றதா? அல்லது அவருடைய பெயரை பயன்படுத்தி வேறு யாரேனும் நிர்வாக ரீதியான அழுத்தங்களை ஏற்படுத்தியதன் விளைவாக இந்த நிலை உருவானதா? என்பதற்கு தமிழ்நாடு அரசு வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டும்.

ஒருவேளை, இந்தச் சூழ்நிலை முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு வராமல் ஏற்பட்டிருந்தால், சட்டத்தின் வழியில் ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் அவர்கள் உடனடியாக தலையிட்டு, சுயாட்சி அமைப்புகளின் சுதந்திரத்தையும், நிறுவனங்களின் கண்ணியத்தையும், பொதுமக்களின் நம்பிக்கையையும் பாதுகாக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுத்து இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

ஒருவேளை, சட்டத்தில் குறிப்பிடப்பட்ட நடைமுறைகளுக்கு அப்பாற்பட்ட நிர்வாக அழுத்தங்களின் காரணமாக இத்தகைய நிலை உருவாகியிருந்தால், அது RERA சட்டத்தின் நோக்கத்திற்கும், சுயாட்சி ஒழுங்குமுறை அமைப்புகளின் அடிப்படைக் கொள்கைகளுக்கும் முரணானதாகக் கருதப்படக்கூடிய ஒரு மிக முக்கியமான சட்ட மற்றும் நிர்வாகக் கேள்வியாகும்.”

மேலும், கடந்த காலங்களில் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் சில கொள்கைகள் மற்றும் அபராத நடைமுறைகள் குறித்து FAIRA தொடர்ந்து விமர்சனங்களையும் சட்டத்திருத்தக் கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளதாகவும், அதே நேரத்தில் தற்போதைய நிர்வாகம் மேற்கொண்டுள்ள இணையவழி சேவைகள், நிர்வாகச் சீர்திருத்தங்கள், வெளிப்படைத்தன்மை மற்றும் டிஜிட்டல் மேம்பாடுகள் போன்ற நேர்மறை நடவடிக்கைகளையும் பாராட்ட வேண்டிய கடமை இருப்பதாகவும் டாக்டர் ஆ. ஹென்றி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “ஒரு அமைப்பை விமர்சிப்பதும், அந்த அமைப்பின் நிறுவனச் சுதந்திரத்தைப் பாதுகாக்க வலியுறுத்துவதும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல. ஒரு பொறுப்புள்ள தேசிய அமைப்பாக, நல்லவற்றை பாராட்டுவதும், திருத்தப்பட வேண்டியவற்றை சுட்டிக்காட்டுவதும் எங்களது கடமையாகும்” என்றார்.

இறுதியாக, தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்து, RERA போன்ற சட்டப்பூர்வ சுயாட்சி அமைப்புகளின் நிறுவனச் சுதந்திரம், நிர்வாகத் தொடர்ச்சி மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கை எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் “ஒரு அரசு மாறலாம்; ஒரு நிர்வாகம் மாறலாம்; ஆனால் சட்டத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையும், சட்டப்பூர்வ நிறுவனங்களின் சுயாட்சியும் ஒருபோதும் பாதிக்கப்படக் கூடாது. அதுவே ஜனநாயகத்தின் உயிர்நாடி” என்றும் டாக்டர் ஆ. ஹென்றி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

0Shares