பொதுமக்கள் சொத்துவாங்கும்கனவைபலியிடக்கூடாது
![]()
அரசின் வருவாய் இலக்கை எட்டுவதற்காக பொதுமக்களின்சொத்து வாங்கும் கனவை பலியிடக் கூடாது
வழிகாட்டி மதிப்பை செயற்கையாக உயர்த்தும் எந்த முயற்சியையும் கைவிட வேண்டும் – அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) தேசிய தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி வலியுறுத்தல்
தமிழ்நாடு அரசு அண்மைக்காலமாக பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மக்கள் நலனுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவது அரசின் கடமை என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.
ஆனால், சமீபகாலமாக ஊடகங்களில் வெளியாகி வரும் தகவல்கள் மற்றும் துறை சார்ந்த வட்டாரங்களில் பரவி வரும் செய்திகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, மாநிலம் முழுவதும் விவசாய நிலங்கள், வீட்டுமனைகள், கிராம நத்தம் நிலங்கள், ரியல் எஸ்டேட் திட்டங்கள் மற்றும் வணிகப் பயன்பாட்டு நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பை கணிசமான அளவில் உயர்த்துவது தொடர்பாக ஆய்வுகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
வழிகாட்டி மதிப்பு என்பது அரசின் வருவாயை அதிகரிக்கும் கருவியாக அல்ல; மக்களின் சொத்து பரிவர்த்தனைகளுக்கு நியாயமான மற்றும் வெளிப்படையான அடிப்படையை உருவாக்கும் நிர்வாகக் கருவியாகும் என்பதை அரசு மற்றும் பதிவுத்துறை உணர வேண்டும்.
இன்று ஒரு சாதாரண குடும்பம் தனது வாழ்நாள் சேமிப்பை முழுமையாக செலவழித்து ஒரு சிறிய வீட்டுமனை அல்லது வீடு வாங்குவதற்கே போராடி வருகிறது. இந்நிலையில் வழிகாட்டி மதிப்பு அதிகரிக்கப்பட்டால் அதன் தாக்கம் வெறும் முத்திரைத்தாள் கட்டணம் அல்லது பதிவுக்கட்டண உயர்வாக மட்டும் இருக்காது.
அதன் விளைவாக, பதிவுக்கட்டணம் பல ஆயிரம் முதல் பல லட்சம் ரூபாய் வரை அதிகரிக்கும். வீட்டுக் கடன் பெறும் மக்களின் நிதிசுமை உயரும். முதல் முறையாக வீடு வாங்கும் நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்கள் பாதிக்கப்படுவார்கள். விவசாய நில பரிவர்த்தனைகள் கடுமையாக பாதிக்கப்படும். சிறு மற்றும் நடுத்தர முதலீட்டாளர்கள் சந்தையில் இருந்து வெளியேறும் நிலை ஏற்படும். கட்டுமானத் துறை மற்றும் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி வேகம் குறையும். நில விற்பனை சந்தையில் மந்தநிலை உருவாகும். கிராமப்புற பொருளாதாரம் பாதிக்கப்படும்.
ஒரு அரசு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக திட்டங்களை செயல்படுத்த வேண்டும்; அந்தத் திட்டங்களுக்கான வருவாயை ஈட்டுவதற்காக மக்களின் அடிப்படை தேவைகளின் மீது கூடுதல் பொருளாதாரச் சுமையை ஏற்றக்கூடாது. மக்களுக்காகத்தான் அரசு இருக்கிறது; அரசுக்காக மக்கள் இல்லை.
ஒரு குடும்பம் கல்வி, மருத்துவம், திருமணம், தொழில் தொடக்கம் அல்லது சொந்த வீடு வாங்குதல் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக நிலம் வாங்கும் போது, அந்த நிலத்தின் மீது கூடுதல் வழிகாட்டி மதிப்பு சுமத்தப்பட்டால் அதன் பாரம் நேரடியாக பொதுமக்களின் தோள்மீதே விழுகிறது.
குறிப்பாக, தமிழ்நாட்டில் ஏற்கனவே பல இடங்களில் வழிகாட்டி மதிப்பு மற்றும் உண்மையான சந்தை மதிப்பு இடையே பெரும் முரண்பாடுகள் நிலவுகின்றன. சில புல எண்களில் பூஜ்ஜிய மதிப்பு காணப்படுவதும், சில பகுதிகளில் உண்மையான சந்தை மதிப்பை விட பல மடங்கு அதிகமான வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கப்பட்டிருப்பதும் நடைமுறை சிக்கல்களை உருவாக்கி வருகிறது.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான அல்லது செயற்கையான வழிகாட்டி மதிப்பு உயர்வை மேற்கொள்வது பிரச்சினைகளை மேலும் தீவிரப்படுத்தும். எனவே, அரசு மற்றும் பதிவுத்துறை பின்வரும் கொள்கையை பின்பற்ற வேண்டும்:
“வருவாய் அதிகரிப்பதற்காக வழிகாட்டி மதிப்பை உயர்த்த வேண்டாம்; உண்மையான சந்தை நிலவரம், அடிப்படை வசதிகள், மக்கள் வாங்கும் திறன் மற்றும் பொருளாதார சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே மதிப்பை நிர்ணயிக்க வேண்டும்.”
மேலும், மாநிலம் முழுவதும் விவசாயிகள், பொதுமக்கள், ரியல் எஸ்டேட் துறையினர், கட்டுமான நிறுவனங்கள், மதிப்பீட்டு நிபுணர்கள், ஆவண எழுத்தாளர்கள் மற்றும் தொழில்துறை அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தாமல் எந்தவொரு பெரிய அளவிலான வழிகாட்டி மதிப்பு உயர்வையும் அறிவிக்கக் கூடாது.
அரசு உண்மையிலேயே மக்களின் நலனை முன்னிறுத்த விரும்பினால், பதிவுத்துறையின் வருவாயை அதிகரிக்கும் எளிய வழி வழிகாட்டி மதிப்பை உயர்த்துவது அல்ல; மாறாக பதிவு செயல்முறைகளை எளிமைப்படுத்தி, தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தி, நிலுவையில் உள்ள பிரச்சினைகளை தீர்த்து, அதிக பரிவர்த்தனைகள் நடைபெறும் சூழலை உருவாக்குவதே ஆகும்.
தமிழ்நாடு அரசு மக்கள் நலனை முதன்மையாகக் கருதி, வழிகாட்டி மதிப்பு உயர்வு தொடர்பான எந்த முடிவையும் மிகுந்த கவனத்துடனும் பொறுப்புடனும் அணுக வேண்டும் என அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) சார்பில் டாக்டர் ஆ.ஹென்றி வலியுறுத்தியுள்ளார்.

