விசைத்தறி கூட்டமைப்பு 15 தீர்மானம் நிறைவேற்றம்

Loading

ஈரோடு
*விசைத்தறி கூட்டமைப்பு செயற்குழு: 15 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!**
ஈரோடு தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதுமிருந்து மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் நேரடியாகவும், வாட்ஸ்அப் கான்பிரன்ஸ் வழியாகவும் கலந்து கொண்டு புதிய அரசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். விசைத்தறி தொழிலையும் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் வகையில் மொத்தம் 15 முக்கிய தீர்மானங்கள் இக்கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
அவற்றில் குறிப்பாக, அனைத்து விசைத்தறி கூடங்களுக்கும் தற்போது வழங்கப்படும் 1,000 யூனிட் இலவச மின்சாரத்தை தேர்தல் வாக்குறுதிப்படி 1,500 யூனிட்டுகளாக உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும், பொங்கல் இலவச வேட்டி-சேலை உற்பத்தியை நெறிமுறைப்படுத்தி நெசவாளர்களுக்கு முழுமையாக 6 மாத கால வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், வீடுகளுக்குள் இயங்கும் சிறு குறு விசைத்தறி கூடங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சொத்து வரி உயர்வை ரத்து செய்து தொழிற்சாலை வரியிலிருந்து மீண்டும் பழைய வீட்டு வரிக்கே மாற்ற வேண்டும், விசைத்தறிக்கூடங்களின் மேற்கூரையில் 50 சதவீத மானியத்துடன் கூடிய சோலார் பேனல்களை அமைத்து மின் கட்டண சுமையை குறைக்க வழிவகை செய்ய வேண்டும், அரசுத் துறை பணியாளர்களின் சீருடைகள் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடை டிசைன்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்யக்கூடியதாக மாற்றி நெசவாளர்களுக்கு வழங்க வேண்டும் மற்றும் சாயக் கழிவு பாதிப்பிலிருந்து விசைத்தறி தொழிலை பாதுகாக்க மாவட்டத்திற்கு ஒரு பொது சுத்திகரிப்பு நிலையத்தை அரசு சார்பில் அமைத்துத் தர வேண்டும் ஆகிய முக்கிய கோரிக்கைகள் முன்னிலைப்படுத்தப்பட்டன.
இக்கூட்டத்தைத் தொடர்ந்து, விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சண்முகத்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர். அடுத்த வாரம் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் துறை சார்ந்த அமைச்சர்களை நேரில் சந்தித்து இந்தத் தொழில்சார்ந்த கோரிக்கைகளை சமர்ப்பிக்க உள்ளதால், அதற்கு தங்ளுடன் உடன் வருமாறு சட்டமன்ற உறுப்பினரிடம் விசைத்தறியாளர்கள் முறைப்படி வேண்டுகோள் விடுத்தனர்.
0Shares