தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது- ஜி.கே.வாசன்

Loading

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: ஜி.கே.வாசன் சாடல்!
ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் மக்கள் பிரச்சினைகள் குறித்துப் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசுகையில், தமிழகத்தில் கடந்த ஆட்சியைப் போலவே தற்போதைய ஆட்சியிலும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை தொடர்ந்து நீடித்து வருவதாகக் குற்றம் சாட்டினார். நாள்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், தவறு செய்பவர்கள் அச்சப்படும் வகையில் அரசு இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்பதே த.மா.கா-வின் உறுதியான நிலைப்பாடு என்றும் தெரிவித்தார்.
மேலும், புதிய அரசு பதவியேற்றதும் விவசாயிகளுக்கு முழுமையான கடன் தள்ளுபடி செய்யப்படாததால் அவர்கள் தங்களின் நம்பிக்கையை இழந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், இந்த அரசு விவசாயம் சார்ந்த அரசாகச் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேகதாது விவகாரத்தில், அணை கட்டத் துடிக்கும் கர்நாடக அரசின் பிடிவாதத்தைக் கண்டிக்காமல், அங்குள்ள கூட்டணி மற்றும் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது என்றவர், தமிழக முதல்வர் உடனடியாகக் கர்நாடக முதல்வரைத் தட்டிக்கேட்டு இப்பிரச்சினையை டெல்லி அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், மின்வாரிய அலுவலகத்தில் ‘ஹார்ட் டிஸ்க்’ காணாமல் போன விவகாரத்தில் சந்தேகம் வலுப்பதால் அரசு இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அமைச்சர் கே.என்.நேரு மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்துக் கேட்டபோது, “சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும்” என்று பதிலளித்தார். தேர்தலில் கூட்டணி வைத்த கட்சிகள் தேர்தலுக்குப் பிறகும் நட்பு ரீதியாகவே தொடர்கின்றன என்றும், தற்போதைய வாக்காளர்கள் விழிப்புடன் இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்ட அவர், த.மா.கா-வை வலுப்படுத்துவது குறித்து வரும் ஜூன் 14-ஆம் தேதி சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது என்றும் கூறினார்.
இறுதியாக, நார்வேயில் வெற்றி பெற்ற செஸ் வீரர் பிரக்யானந்தாவுக்கும், புதிய இயக்கம் தொடங்கியுள்ள அண்ணாமலைக்கும் ஜி.கே.வாசன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தச் செய்தியாளர் சந்திப்பின் போது த.மா.கா மாநிலப் பொதுச்செயலாளர் யுவராஜா, துணைத்தலைவர் விடியல் சேகர் மற்றும் மாவட்டத் தலைவர் விஜயகுமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
0Shares