வாழ்வியல் மாற்றங்களால் பெருகும் கல்லீரல் பாதிப்பு
![]()
ஈரோடு
வாழ்வியல் மாற்றங்களால் பெருகும் பக்கவாதம், கல்லீரல் பாதிப்பு: ஈரோட்டில் மருத்துவ நிபுணர்கள் விழிப்புணர்வு!
ஈரோடு ரயில்வே நிலையம் அருகே அமோடா ஹெல்த்சென்டர்வுடன் இணைந்து சென்னை அப்போலோ மருத்துவமனையின் புதிய தகவல் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவிற்கு அப்போலோ மருத்துவமனை பொறுப்பாளர் நாகர்ஜுன் ரெட்டி தலைமை தாங்கினார். அமோடா ஹெல்த் சென்டர் நிர்வாக இயக்குனர் கோகுல் முன்னிலை வகித்தார். டவுன் டிஎஸ்பி முத்துக்குமார் குத்துவிளக்கேற்றி மையத்தைத் தொடங்கி வைத்தார்.
விழாவில் அப்போலோ மருத்துவமனையின் மூளை நரம்பியல் மற்றும் பக்கவாத சிகிச்சை பிரிவு முதுநிலை நிபுணர் டாக்டர் அரவிந்த் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தற்போதைய வாழ்வியல் மாற்றங்களால் உலகில் பத்தில் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படுகிறது. அதிக ரத்த அழுத்தம், சர்க்கரை நோயால் மூளை நரம்புகள் பாதிக்கப்படுவதே இதற்கு காரணம். கை மரத்துப்போதல், வாய் மற்றும் நடை மாறுபடுதல், பார்வை மங்குதல் இதன் அறிகுறிகளாகும். பாதிப்பு ஏற்பட்ட 4 மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு வந்தால் நரம்பு ரத்த இறுக்கத்தை கரைக்க ஊசி உள்ளது. 24 மணி நேரத்திற்குள் வந்தால், இதய அடைப்பிற்கு செய்வது போல மூளை நரம்பிலும் ஆஞ்சியோ சிகிச்சை செய்து பக்கவாதத்தை நிரந்தரமாக குணப்படுத்தலாம்” என்றார்.
தொடர்ந்து, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை முதுநிலை நிபுணர் டாக்டர் நிவாஸ் வெங்கடாசலபதி பேசுகையில், “இந்தியாவில் சுமார் 5 கோடி பேர் கல்லீரல் பாதிப்பிற்குள்ளாகி, ஆண்டுக்கு 2.5 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். மது பழக்கத்தால் 38 சதவீதமும், கொழுப்புணவுகளால் 28 சதவீதமும் கல்லீரல் பாதிப்பு ஏற்படுகிறது. பல கல்லீரல் நோய்கள் ஆரம்பத்தில் அறிகுறியின்றி தீவிரமடைவதால், முன்கூட்டியே பரிசோதிப்பது அவசியம். பாதிக்கப்பட்டவர்களுக்கு நெருங்கிய உறவினர்கள் அல்லது மூளைச்சாவு அடைந்தவர்களின் கல்லீரலை தானமாகப் பெறலாம். இந்த புதிய தகவல் மையம் மூலம் ஈரோடு மக்கள் இத்தகைய உயர்தர ஆலோசனைகளை எளிதாகப் பெற முடியும்” என்றார்.
மேலும், பக்கவாதத்திற்கான ஆஞ்சியோ சிகிச்சை மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை தமிழக அரசின் முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் குறிப்பிட்ட நிதி உச்சவரம்பிற்குள் இலவசமாகச் செய்துகொள்ளலாம் என்றும், அதற்குமேல் ஆகும் கூடுதல் செலவை மருத்துவமனையே ஏற்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்தனர்.

