மனிதர்களின்அலட்சியம் அதலபாதாளத்திற்குசென்றநீர்

Loading

செம்பரம்பாக்கம் ஏரிக்குஅருகிலேயே அதலபாதாளத்திற்குச் சென்ற நிலத்தடி நீர்: குன்றத்தூரில் நீர்வள அவசரநிலைபிரகடனம் செய்ய மக்கள் நலப் பேரவை தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கோரிக்கை

மேலும் அவர்  தமிழக முதலமைச்சரூக்கு எழுதிய கடிதத்தில்…

“நீரின்றி அமையாது உலகு” என்று நம் தமிழர் நாகரிகம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகிற்கு உணர்த்தியது. ஆனால் இன்று மனிதர்களின் அலட்சியம், கட்டுப்பாடற்ற நகர வளர்ச்சி, இயற்கை வளங்களை பாதுகாக்காத மனப்போக்கு மற்றும் நீரின் அருமையை உணராத வாழ்க்கை முறை ஆகிய காரணங்களால், நீரால் செழித்திருந்த பகுதிகளே குடிநீருக்காக தவிக்கும் அபாயகரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. சென்னை மாநகரின் உயிர்நாடியாக விளங்கும் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியை ஒட்டிய பகுதியாக இருக்கும் குன்றத்தூர் நகராட்சி, இன்று மிகப்பெரிய நீர்வள அவசரநிலையை எதிர்கொண்டு வருவது மிகுந்த வேதனையளிக்கிறது. சென்னை 400 அடி வெளிவட்டச் சாலை, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள், சர்வதேச கல்வி நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வேகமான நகரமயமாக்கல் ஆகிய காரணங்களால் குன்றத்தூர் நகராட்சி கடந்த சில ஆண்டுகளில் மிக வேகமாக வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனால் இந்த வளர்ச்சி இயற்கையை பாதுகாக்கும் திட்டமிடலின்றி நடந்ததால் இன்று அந்த பகுதி மக்கள் கடுமையான குடிநீர் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். ஒருகாலத்தில் குறைந்த ஆழத்தில் கிடைத்த நிலத்தடி நீர், தற்போது 400 அடி ஆழத்திற்கும் கீழ் சென்று விட்டதாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கங்கள் மிகுந்த கவலையுடன் தெரிவித்து வருகின்றனர். “ஏரிக்கு அருகில் நீர் இல்லை” என்பது சாதாரண பிரச்சினை அல்ல, எதிர்கால பேராபத்து. செம்பரம்பாக்கம் போன்ற மிகப்பெரிய குடிநீர் ஏரிக்கு அருகிலேயே நிலத்தடி நீர் வறண்டு போவது என்பது இயற்கையின் கடுமையான எச்சரிக்கை ஆகும். இன்று குன்றத்தூரில் ஏற்பட்டுள்ள இந்த நிலை, நாளை சென்னை மாநகரின் பல பகுதிகளிலும் உருவாகும் அபாயம் இருப்பதை வெளிப்படுத்துகிறது.

விவசாய நிலங்கள் மற்றும் திறந்த வெளிகள் அனைத்தும் கான்கிரீட் கட்டிடங்களாக மாறிவிட்டதால் மழைநீர் நிலத்திற்குள் செல்வது முற்றிலும் குறைந்து விட்டது. பல வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் பெயருக்கு மட்டும் இருப்பதும், பராமரிப்பு இல்லாததால் அவை பயன்பாட்டில் இல்லாததும் இந்த நிலத்தடி நீர் சரிவுக்கு முக்கிய காரணமாகும். அத்துடன் அதிக அளவில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து நிலத்தடி நீரை வர்த்தக நோக்கில் உறிஞ்சுவதும், சில தொழிற்சாலைகள் மற்றும் கல் குவாரிகள் தினசரி லட்சக்கணக்கான லிட்டர் நீரை பயன்படுத்துவதும் இயற்கை நீர்சுழற்சியை சீர்குலைத்துள்ளது. இயற்கை நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் மறைக்கப்பட்டதால் மழைநீர் சேமிப்பு முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மரங்கள் வெட்டப்பட்டதால் நிலத்தடி நீரை தக்கவைக்கும் இயற்கை அமைப்பு அழிந்துள்ளதோடு, மக்கள் தொகை அதிகரிப்பால் குடிநீர் தேவையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. குடிநீரின் அருமையை உணராமல் பல இடங்களில் தண்ணீர் வீணடிக்கப்படுவதும் இதற்கு மற்றொரு காரணியாகும். இந்நிலை தொடர்ந்தால் குடிநீர் விலை கடுமையாக உயர்ந்து, ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரும் துயரம் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படும். நிலத்தடி நீர் முற்றிலும் உப்பு கலந்ததாக மாறும் அபாயமும், விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் முற்றிலும் பாதிக்கப்பட்டு வெப்பநிலை அதிகரிக்கும் சூழலும் உருவாகும். இது எதிர்கால தலைமுறைக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்காத பேராபத்தை ஏற்படுத்தும்.

எனவே, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு குன்றத்தூர் மற்றும் செம்பரம்பாக்கம் சுற்றுப்புற பகுதிகளை “சிறப்பு நீர்வள பாதுகாப்பு மண்டலமாக” அறிவிக்க வேண்டும். அனைத்து வீடுகள், குடியிருப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் கட்டாய மழைநீர் சேகரிப்பு சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும். கான்கிரீட் தளங்களை குறைத்து, மழைநீர் நிலத்திற்குள் செல்வதற்கான நவீன ஊடுருவும் சாலை (Permeable Pavement) தொழில்நுட்பத்தை அரசு அறிமுகப்படுத்த வேண்டும்.

பழமையான நீர்வழித்தடங்களை மீட்டெடுக்க அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றி, ரீசார்ஜ் கிணறுகள் (Recharge Wells) மற்றும் ரீசார்ஜ் பூங்காக்கள் போன்ற நவீன செயற்கை நிலத்தடி நீர் நிரப்பு மையங்களை அமைக்க வேண்டும். நிலத்தடி நீரை அதிகமாக பயன்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு ‘வாட்டர் ஆடிட்’ (Water Audit) முறையை கட்டாயப்படுத்த வேண்டும்.

பொதுமக்கள் மற்றும் மாணவர்களை ஒருங்கிணைத்து ஒவ்வொரு வார்டிலும் “நீர் காவலர் குழு” அமைப்பதோடு, குன்றத்தூர் சுற்றுவட்டாரங்களில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். செயல்படாத மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஆய்வு செய்து அபராதம் விதிக்க தனிப்பிரிவு அமைப்பதோடு, குடிநீரை வீணடிக்கும் வணிக நிறுவனங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்க வேண்டும். நீரின் அருமையை சிறு வயதிலிருந்தே உணர்த்த பள்ளி மாணவர்களுக்கு “நீர் பாதுகாப்பு பாடம்” கொண்டு வரப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, செம்பரம்பாக்கம் ஏரியைப் பாதுகாக்க, நீர்மட்ட கண்காணிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒருங்கிணைக்கும் ஒரு தனிச்சிறப்பு ஆணையத்தை அரசு நிறுவ வேண்டும்.

இந்த நிலையை ஒரு சாதாரண உள்ளூர் பிரச்சினையாக அல்லாமல், “சென்னையின் எதிர்கால குடிநீர் பாதுகாப்பு போராட்டம்” எனக் கருதி அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று நீரை பாதுகாப்பது என்பது நாளைய தலைமுறையின் உயிரைக் காப்பதற்கு சமமானது. “ஒரு துளி நீரை காப்போம்… ஒரு தலைமுறையின் உயிரை காப்போம்…” என்ற உன்னத நோக்கோடு, அரசு, பொதுமக்கள், சமூக அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே எதிர்கால தமிழகம் தண்ணீர் தட்டுப்பாடின்றி வளமான மாநிலமாக திகழும் என மக்கள் நலப் பேரவை தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி தனது கோரிக்கை மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

 

0Shares