மத்திய கிழக்கு நாட்டில் போரினால்எரிவாயு தட்டுப்பா
![]()
மத்திய கிழக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக ஏற்பட்ட எரிவாயு தட்டுப்பாட்டால் திருவள்ளூர் மாவட்டத்தில் ஓட்டல் மற்றும் டீக்கடை, உணவகங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு :
திருவள்ளூர் மார்ச் 12 : மத்திய கிழக்கு நாடுகளில் போர் விரிவடைந்து வரும் நிலையில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இதனால் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 60 உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது அதன் முன்பதிவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 21 நாட்கள் இடைவெளியில் முன்பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது 25 நாட்களாக உயர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக வணிக சிலிண்டர்கள் திருவள்ளூரில் உள்ள அனைத்து ஓட்டல்களிலும் போதுமான கையிருப்பு இல்லை எனவும் இதனால் உணவு சமைப்பதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஹோட்டல்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர். அதே நேரத்தில் ஒரு சில ஓட்டல்களில் ராக்கெட் அடுப்பு, நீராவி அடுப்பு ஆகியவற்றின் மூலம் உணவு தயாரித்து வருவதாகவும் சிலிண்டர் தட்டுப்பாடு நீங்கும் வரை இதில் உணவு தயாரிக்க முடிவு செய்திருப்பதாகவும் ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எரிவாயு சிலிண்டருக்கு ஆகும் செலவை விட இந்த ராக்கெட் அடுப்பு மற்றும் நீராவி அடுப்பு மூலம் உணவு தயாரிக்கும் போது செலவும் வெகுவாக குறையுமென்றும் தற்போது ஈரோடு சேலம் திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் இவை அதிக அளவில் பயன்பாட்டில் இருப்பதாகவும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சில ஓட்டல் உரிமையாளர்கள் இதனை தற்போது உபயோகிக்க தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
அதே நேரத்தில் சிலிண்டர் கையிருப்பு உள்ளவரை ஹோட்டல்கள் திறந்து வைக்கப்படும் எனவும் இன்னும் 2 மட்டுமே சிலிண்டர்கள் இருக்கும் எனவும் இதனால் நாளை மறுநாள் முதல் சிலிண்டர் முழுவதுமாக கிடைக்கவில்லை என்றால் ஓட்டல் டீக்கடை மற்றும் உணவகங்கள் மூட வாய்ப்புள்ளதாகவும் ஒரு சில ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். சிலிண்டர் தட்டுப்பாட்டால் எலக்ட்ரிக் அடுப்புகள் மற்றும் விறகுகள் விலை உயர்ந்துள்ளதாகவும் இதனால் சமையல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

