தமிழகஅரசுக்கு10அம்ச கோரிக்கை விடுப்புபோராட்டம்

Loading

ஈரோடு
தமிழக அரசுக்கு 10 அம்ச கோரிக்கை: பிப்.18-ல் தற்செயல் விடுப்பு போராட்டம் – ஈரோட்டில் கூட்டு நடவடிக்கை குழு அறிவிப்பு!
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள ‘அனைத்து சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு’ சார்பில், ஈரோடு மாநகராட்சி அலுவலகம் முன்பு இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் வி.எம்.வெங்கடசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தங்களது நியாயமான 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஊழியர்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், நகராட்சி மற்றும் மாநகராட்சி பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், அரசாணை 152 மற்றும் 10-ல் விடுபட்ட பணியிடங்களை உடனடியாக வழங்க வேண்டும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கருணை அடிப்படை பணி நியமனங்களைச் சிறப்பு நிகழ்வாகக் கருதி உடனடியாக நிரப்ப வேண்டும் மற்றும் அரசாணை 338-ன் படி செயல்திறனற்ற பணியாளர்களுக்கு ரூ.1,900 தர ஊதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்கடசாமி, “எங்களது கோரிக்கைகள் குறித்து ஏற்கனவே அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளைச் சந்தித்து மனு அளித்துள்ளோம். எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், வரும் பிப்ரவரி 18-ம் தேதி (18.02.2026) மாநிலம் தழுவிய அளவில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்துப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
அப்போதும் அரசு செவிசாய்க்கவில்லை எனில், அடுத்தகட்டமாக அனைத்துச் சங்கங்களும் ஒன்றிணைந்து தீவிரமான முடிவுகளை எடுப்போம்” என எச்சரிக்கை விடுத்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டு தங்களது ஆதரவைப் பதிவு செய்தனர்.
0Shares