ஓட்டுநர் துலக்குநர் சங்கத்தின்30ஆம்ஆண்டு விழா

Loading

ஈரோடு
*ஈரோடு மாநகராட்சியில் ஓட்டுநர் மற்றும் துலக்குநர் சங்கத்தின் 30-ஆம் ஆண்டு நிறைவு விழா: பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாடு!*
ஈரோடு: தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி ஓட்டுநர் மற்றும் துலக்குநர் சங்கத்தின் (அரசு அங்கீகாரம் பெற்றது) 30-ஆம் ஆண்டு நிறைவு விழா, புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் கோரிக்கை மாநாடு ஈரோடு பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது. விழாக்குழுவினர் பஷீர் அகமது மற்றும் மோகன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சங்கத்தின் கொடியேற்றத்துடன் மாநாட்டு விவாதங்கள் தொடங்கின. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக நகராட்சி மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் கா.முருகானந்தம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊர்தி ஓட்டுநர் சங்க மாநிலத் தலைவர் பா.பச்சையப்பன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். பல்வேறு மண்டலங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஓட்டுநர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்ட இம்மாநாட்டில், சங்கத்தின் புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநாட்டின் முக்கிய நிகழ்வாக, தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 12 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசாணை எண் 10 மற்றும் 152-ஐ தளர்வு செய்து குறைக்கப்பட்ட ஓட்டுநர் பணியிடங்களை மீண்டும் தோற்றுவிக்க வேண்டும் மற்றும் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஓட்டுநர்களின் பணிகளை வரன்முறைப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
மேலும், புதிய வாகனங்கள் கொள்முதல் செய்யும்போதே ஓட்டுநர் பணியிடங்களையும் உருவாக்க வேண்டும், ஜேசிபி இயந்திரம் இயக்கப் பயிற்சி பெற்ற ஓட்டுநர்களுக்கு அதற்கான பணியிடங்களை வழங்க வேண்டும், கல்வித் தகுதிக்கேற்ப பதவி உயர்வு மற்றும் பணி மாற்றம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன. ஓட்டுநர்களுக்குச் சீருடை, காலணி, மழைகோட் உள்ளிட்ட வசதிகளை அரசு ஓட்டுநர்களுக்கு இணைய வழங்க வேண்டும் என்றும், உடல்நலம் பாதிக்கப்பட்ட ஓட்டுநர்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பணியின் போது உயிரிழந்த ஓட்டுநர்களின் வாரிசுகளுக்கு கல்வித் தகுதியைப் பொருட்படுத்தாமல் கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் மற்றும் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் சேமநல நிதி முறையாகக் கருவூலத்தில் செலுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மாநாட்டில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இறுதியாக, அரசு ஆணை எண் 237-ன் படி ஓட்டுநர்களுக்குத் தர ஊதிய உயர்வு (Grade Pay) நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நகராட்சி நிர்வாக இயக்குநர் மூலமாக அரசுக்குச் சமர்ப்பிக்க முடிவெடுக்கப்பட்டது. இந்த மாநாடு ஓட்டுநர்களின் வாழ்வாதார உரிமைகளை மீட்டெடுக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
0Shares