ஈரோட்டில் களைகட்டிய சமத்துவப் பொங்கல்

Loading

ஈரோடு
ஈரோட்டில் களைகட்டிய சமத்துவப் பொங்கல்: பறை இசைத்து சிலம்பம் ஆடி அசத்திய மாவட்ட ஆட்சியர்
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா இன்று மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் வழக்கமான அரசு நடைமுறைகளைத் தாண்டி கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகள் களைகட்டின. விழாவின் சிகர நிகழ்வாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் தமிழர்களின் பாரம்பரிய இசைக் கருவியான பறையை கையில் எடுத்து அதிரடியாக இசைத்து நடனமாடியது அங்கிருந்தோரை வியப்பில் ஆழ்த்தியது. அதனைத் தொடர்ந்து வீரக்கலையான சிலம்பாட்டத்திலும் தனது திறமையை வெளிப்படுத்தி ஆட்சியர் அசத்திய நிலையில் அங்கிருந்த அரசுப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே பலத்த கைதட்டலையும் வரவேற்பையும் பெற்றது. இதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் பணியாளர்கள் அலுவலக வளாகத்தில் வண்ணமயமான கோலங்களை இட்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பணியாளர்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவின் நிறைவாக மங்கல இசை முழங்க புதுப்பானையில் சர்க்கரைப் பொங்கல் வைக்கப்பட்டு “பொங்கலோ பொங்கல்” என உற்சாக முழக்கமிட்டு அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தனர். பின்னர் அனைவருக்கும் கரும்பு மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. அரசுப் பணியிடத்தில் நிலவும் பணிச்சுமையை மறந்து உயர் அதிகாரிகளும் பணியாளர்களும் ஒரு குடும்பமாக இணைந்து கொண்டாடிய இந்த பொங்கல் விழா ஈரோடு மாவட்ட மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0Shares