அதிக பாரம் ஏற்றக் கோரி தனியார் ஆலைகள் நெருக்கடி
![]()
ஈரோடு
அதிக பாரம் ஏற்றக் கோரி தனியார் ஆலைகள் நெருக்கடி: ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் கரும்பு கட்டுகளுடன் வாகன உரிமையாளர்கள் மனு
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், கரும்பு வாகன உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் கரும்பு கட்டுகளுடன் வந்து நூதன முறையில் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகங்கள், போக்குவரத்து விதிகளை மீறி 6 சக்கர லாரிகளில் நிர்ணயிக்கப்பட்ட 12 டன்னுக்கு பதிலாக, சுமார் 20 டன் வரை கரும்பு ஏற்றச் சொல்லி உரிமையாளர்களைக் கடுமையாக நிர்பந்திப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். அதேபோல், விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டிய டிராக்டர்களை அதிக பாரத்துடன் சாலைகளில் இயக்குவதால், ஈரமான விளைநிலங்களில் வாகனங்கள் சிக்கி விபத்துகள் ஏற்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். அதிக பாரம் ஏற்றுவது தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரியுள்ள அவர்கள், வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் விதிகளின்படி சரியான அளவு பாரம் மட்டுமே ஏற்றப்படும் என உறுதி அளித்துள்ளனர். எனவே, லாரி மற்றும் டிராக்டர்களுக்குச் சரியான அளவு பாரம் மற்றும் முறையான வாடகையை நிர்ணயம் செய்து, வாகன உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.

