மீனவர்இலவசகல்வி திட்டம் -MLA அனிபால் கென்னடி
![]()
புதுச்சேரி நவ-21
புதுச்சேரி மீனவர் இலவச கல்வி திட்டம் குறித்து மீன்வளத்துறை இயக்குனரிடம் எம்எல்ஏ அனிபால் கென்னடி ஆலோசனை
புதுச்சேரி, உப்பளம்:
புதுச்சேரி மாநில மீனவர் சமூக நலனுக்காக இலவசமாக ஆரம்ப கல்வி முதல் உயர் கல்வி வரை வழங்கும் திட்டத்தை சட்டமன்றத்தில் வலியுறுத்தி பெற்றுத்தந்த உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள், அந்த திட்டம் இன்னமும் அமலுக்கு வராத நிலையில் இன்று மீன்வளத் துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் அவர்களை நேரில் சந்தித்து இது குறித்து கேட்டறிந்தார்.
அரசு அனுமதி பெற்றுள்ள இந்த கல்வித் திட்டம் தாமதமாவதன் காரணமாக, தேவையான பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் திட்டம் நடைமுறைக்கு வரும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் இயக்குனர் தெரிவித்தார்.
இதற்கிடையில், உப்பளம் தொகுதி நேதாஜி நகர் – துறைமுக இணைப்பு சாலை பகுதியில் பெண்கள் சாலையோரத்தில் மீன் விற்பனை செய்ததன் காரணமாக நீண்ட நாட்களாக கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வாக CITIIS திட்டத்தின் மூலம் ரூ.2.25 கோடி செலவில் நவீன வசதிகளுடன் மீன் மார்க்கெட் அமைக்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்திருந்தார்.
பணிகள் முழுமையாக நிறைவடைந்த போதிலும், இந்த நவீன மீன் சந்தை இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை. இது தொடர்பாகவும் அவர் இயக்குனரிடம் கேட்டு, பொது மக்களின் சிரமத்தை தீர்க்க விரைவாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
மீன் மார்க்கெட்டை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான பேச்சு வார்த்தைகள் அதிகாரிகள் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகத்துடன் நடைபெற்று வருவதாக இயக்குனர் தெரிவித்தார். இதனை மேலும் துரிதப்படுத்தி, மீனவர் சமூகம் மற்றும் பொதுமக்கள் உடனடியாக பயனடைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை வைத்தார்.
இந்த சந்திப்பில் மாநில மீனவர்கள் அணி அமைப்பாளர் கோதண்டம், கிளை செயலாளர் ராகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

