சோனா ஆயுஷ் சுகாதாரமையம் சோனா இயற்கைநலம்
![]()
இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு சோனா இயற்கை மருத்துவம் மற்றும் சோனா இயற்கை மருத்துவம் சார்பில் சோனா இயற்கை நலம் திருவிழா
சோனா கல்வி குழுமம், இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கல்வி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் விதமாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழகத்துடன் இணைந்து தமிழக அரசின் அங்கீகாரம் பெற்று BNYS இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவ கல்லூரியை சிறப்பாக நடத்தி வருகிறது. இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு சோனா கல்லூரி வளாகத்தில் உள்ள சோனா ஆயுஷ் சுகாதார மையத்தில் சோனா இயற்கை நலம் திருவிழா நடைப்பெற்றது.
சோனா இயற்கை மருத்துவக் கல்லூரியின் மேலாண்மை அறங்காவலர் திரு.தியாகு வள்ளியப்பா முன்னிலையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் உயர்திரு. ராஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கல்லூரியின் சி.எம்.ஒ சன்சு சந்தீப் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார். முன்னதாக கல்லூரியின் மாணவ மாணவிகள், பெற்றோர்கள், மற்றும் சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
சோனா இயற்கை மருத்துவக் கல்லூரியின் மேலாண்மை அறங்காவலர் திரு.தியாகுவள்ளியப்பா பேசுகையில் சோனா கல்விக் குழுமம் தொழில்நுட்பம், கல்வி, விளையாட்டு, ஜவுளி, கட்டுமானம் போன்றவற்றின் மூலம் சமுதாய வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் திறன்பட செயல்படுவது போல் வாழ்வியல், உணவு, சுகாதாரம் இயற்கையின் நன்மையை கொண்டாடும் விதமாக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் இந்த விழாவில் மரபுக் காய்கறிகள், மூலிகைகள், ஆரோக்கிய உணவுகள், இயற்கை பொருட்கள்,பாரம்பரிய மருத்துவம் போன்ற அனைத்தும் ஒரே இடத்தில் சோனா இயற்கை நலம் திருவிழாவில் காட்சிப்படுத்தப்பட்டது பெருமைக்குரிய ஒன்றாகும் எனவும் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் உயர்திரு. ராஜேந்திரன் அவர்கள் பேசும்பொழுது சேலத்தில் 60 ஆண்டு பராம்பரிய மிக்க சோனா கல்வி நிறுவனம் தற்போது இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியை தொடங்கி 6 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி வருகிறது. சமீபகாலமாக இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கல்வி படிப்புகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு மருத்துவத்துறையில் மாணவர்கள் பல சாதனைகளை புரிய வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் இயற்கையின் நன்மைகளை கொண்டாடும் விதத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தும் சோனா கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தினரை அவர் வெகுவாக பாராட்டினார்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை இயற்கை மருத்துவக் கல்லூரியின் டீன் வசந்திபாலமுருகன் சிறப்பாக செய்திருந்தார். இந்த விழாவில் சோனா கல்வி குழுமத்தின் இயக்குனர் கார்த்திகேயன், முதல்வர்கள் செந்தில்குமார், காதர்நவாஷ், கனகராஜ், தர்மசம்வர்த்தினி, பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் என பலர் பங்கேற்றனர்.

