போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்

Loading

புதுச்சேரி நவ-9
புதுச்சேரி அரசு தலையிட்டு பேராசிரியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் –
எதிர்க்கட்சி தலைவர் ஆர். சிவா 
அரசு கல்லூரி பேராசிரியர்களின் பதவி உயர்வில் புதுச்சேரி அரசு அலட்சியம் செய்யாமல் உடனடியாக பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா புதுச்சேரி அரசை வலியுறுத்தி உள்ளார்.
அரசு கல்லூரிகளில் பணிபுரியும் துணைப் பேராசிரியர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ளது. இதனை கண்டித்து பேராசிரியர்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் உயர் கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் பேராசிரியர்கள் பதவி உயர்வு வழங்க கோரி காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தை கடந்த 5–ஆம் தேதி தாகூர் கல்லூரி மற்றும் காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய வளாகத்தில் துவங்கினர். குறிப்பாக பேராசிரியர்கள் மாணவர்களின் வகுப்புகள் பாதிக்காமல் வகுப்புகளை நடத்தி விட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் பாலமுருகன், சங்கரய்யா ஆகியோர் தலைமையில் மூன்றாம் நாளாக நேற்று நடைபெற்ற பேராசிரியர்கள் போராட்டத்தில் மாலையில் பங்கேற்ற சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா போராட்டத்தை ஆதரித்து பேசினார்.
அப்போது, புதுச்சேரி அரசு கல்லூரிகளில் இருநூற்றுக்கும் மேற்பட்ட துணை பேராசிரியர்கள் உள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை பதவி உயர்வு குறித்த கோப்புகள் தயாரித்து அரசுக்கு அனுப்ப வேண்டிய உயர் கல்வித்துறை கடந்த 15 ஆண்டுகளாக மெத்தனமாக உள்ளது. இதன் காரணமாக பதவி உயர்வு கிடைக்காமல் பல பேராசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். சிலர் இறந்துவிட்டனர். பல பேராசிரியர்கள் ஓய்வு வயதை எட்டி உள்ளனர்.
இருந்தும் அவர்களுக்கு பதவி உயர்வு உயர் கல்வித்துறையால் மறுக்கப்படுவது ஏற்புடையதல்ல. இதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். பதவி உயர்வு விவகாரத்தில் அரசு உடனடியாக தலையிட்டு பதவி உயர்வு அளித்து பேராசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். பதவி உயர்வில் அலட்சியம் செய்த உயர் கல்வித்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
0Shares