எந்தவித பெரிய மழை வந்தாலும் எதிர்கொள்ள தயார்..முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சொல்கிறார்!
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 16-ந்தேதி தொடங்கி பல்வேறு நகரங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில், 18 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கனமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். இதற்காக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அவசரகால செயல்பாட்டு மையத்தின் நடவடிக்கைகளையும் கேட்டு அறிந்துள்ளார். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அந்த மையத்தில் உள்ள அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்து உள்ளார். பல்வேறு இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட உள்ள நடவடிக்கைகளை பற்றியும் அப்போது அவர் கேட்டறிந்து உள்ளார்.
இதற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு முழு அளவில் தயாராக உள்ளது. தேனி, நீலகிரியில் வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ளும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது என கூறினார். மேலும் 21 மற்றும் 22 ஆகிய நாட்களில் கனமழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதற்காக அனைத்து வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. எந்தவித பெரிய மழை என்றாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.