புதுச்சேரி திமுக தீபாவளி வாழ்த்து..தமிழகத்தில்?
திராவிட மாடல் ஆட்சி புதுச்சேரியில் மலர்ந்து அடுத்த தீபாவளி அவ்வித மகிழ்ச்சியை மக்களிடம் சேர்க்க கழகத் தோழர்கள் களம் காணுவோம் என்று புதுச்சேரி திமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா, எம்.எல்.ஏ தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:தீப ஒளி ஏற்றும் தீபாவளி விழா இன்று நாடெங்கும் இந்திய மக்களால் கோலாகளமாக கொண்டாடப்படுகிறது. இஃது இல்லங்கள்தோறும் விளக்கேற்றி – விருந்துண்டு உறவை வளர்த்து மகிழ்ச்சி பொங்க வைக்கும் மக்கள் விழாவாகும்.
மதம், சாதி, இனம், மொழி, எல்லை இவைகளை கடந்து ஏழை பணக்காரர் இடைவெளி இன்றி அனைத்து தரப்பினரையும் இன்பம் பொங்க வைக்கும் விழா தீபாவளி ஆகும்.
புதுச்சேரி மண்ணில் வாழும் அனைத்து மக்களும் மகிழ்வுடன் இவ்விழாவை கொண்டாடிட கழகத்தின் சார்பில் வாழ்த்துவதில் உள்ளம் பூரிக்கிறேன்.காலம் காலமாக மக்கள் விழாவாக கொண்டாடப்படும் தீபாவளி பிற்காலத்தில் சில சுயநல சக்திகளால் ஆரிய, திராவிட யுத்தமாக கதை அளக்கப்பட்டு திராவிடரை வெற்றி கொண்ட நாளாக, நரகாசூரனை வென்ற நாளாக திரிக்கப்பட்ட கலாச்சாரத்தை கற்பித்தனர். இந்த கருத்தாக்கங்களை எல்லாம் மீறி மக்கள் இதனை தங்கள் விழாவாக முன்னெடுத்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழ்நாட்டில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சியில் மாநிலம் கண்ட வளர்ச்சியால் மக்கள் மகிழ்ச்சி பொங்க இவ்வாண்டு தீபாவளியை கொண்டாடுவதை நேரில் காண்கிறோம். அதுபோன்ற திராவிட மாடல் ஆட்சி புதுச்சேரியில் மலர்ந்து அடுத்த தீபாவளி அவ்வித மகிழ்ச்சியை மக்களிடம் சேர்க்க கழகத் தோழர்கள் களம் காணுவோம் என்று இந்த தீபாவளி நந்நாளில் உறுதியேற்போம். அந்த எதிர்பார்ப்போடு இல்லம்தோறும் குழந்தைகள், இளைஞர், முதியோர் அனைவரும் புத்தாடை அணிந்து ஒளி ஏற்றி விருந்தளித்து மகிழ்ந்திட இந்த தீபாவளி திருநாளில் வாழ்த்துகிறோம் என புதுச்சேரி திமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா, எம்.எல்.ஏ.கூறியுள்ளார்.