11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து…மாணவர்கள் மகிழ்ச்சி.. அரசாணை வெளியீடு!
தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025ஐ செயல்படுத்தும் விதமாக 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து தமிழக அரசு அரசாணையில் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த கல்வியாண்டு முதல் பிளஸ்-1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருப்பதாக முதல்-அமைச்சர் தெரிவித்தார்.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மட்டுமே இருந்து வந்த பொதுத் தேர்வை, பிளஸ்-1 வகுப்புக்கும் கடந்த 2017-18-ம் கல்வியாண்டில் கொண்டுவரப்பட்டது. பிளஸ்-2 வகுப்பு பாடங்களை தனியார் பள்ளிகள் நடத்துவதில் அதிக ஆர்வம் காட்டுவதை தவிர்ப்பதற்காகவும், பிளஸ்-1 வகுப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் கொண்டு வரப்பட்டதாக அப்போது சொல்லப்பட்டது.
3 ஆண்டுகள் தொடர்ந்து பொதுத்தேர்வு பயத்திலேயே மாணவர்கள் இருப்பார்களே என அப்போது பல தரப்பினரும் கருத்து தெரிவித்தனர். இந்தநிலையில் பிளஸ்-1 பொதுத்தேர்வு 8 ஆண்டுகளுக்கு பிறகு, பொதுத்தேர்வு இனி கிடையாது என மாநில பள்ளிக்கல்வி கொள்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த தேர்வை 8 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதி வந்த நிலையில் தேர்வு ரத்து என்ற அறிவிப்பால் பிளஸ்-1 மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025ஐ செயல்படுத்தும் விதமாக 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து தமிழக அரசு அரசாணையில் வெளியிட்டுள்ளது. அதில், நடப்பு கல்வியாண்டு முதல் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மட்டும் வழங்கப்படும் என்றும் முந்தைய 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் 2030-ம் ஆண்டு வரை அரியர் தேர்வு எழுதலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.