மீண்டும் பா.ஜ.க. கூட்டணிக்கு வெற்றி? வெளியான கருத்துக்கணிப்பு!
பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணிக்கு மீண்டும் வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
பீகாரில் பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதாதளம் இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிற்து.பீகாரில் நவம்பர் மாதம் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ்-ராஷ்டிரீய ஜனதாதளம் இணைந்த இந்தியா கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிகளுக்கு இடையேயான தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
இதற்கிடையே தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் ‘சி வோட்டர்’ நிறுவனம் மக்களிடம் கருத்துக்கணிப்பை நடத்தி முடிவை வெளியிட்டு உள்ளது.அந்த வகையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியமைக்க 40 சதவீத வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. அதேநேரம் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரீய ஜனதாதளம் இணைந்த இந்தியா கூட்டணிக்கு 38.3 சதவீத வாய்ப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
புதிதாக களத்தில் இறங்கியிருக்கும் பிரசாந்த் கிஷோரின் ஜன சுராஜ் கட்சிக்கு 13.3 சதவீத வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்து உள்ளன.
இதைப்போல பீகாரின் பிரச்சினைகளை தீர்க்கும் திறமை கொண்டதாக இந்தியா கூட்டணிக்கு 36.5 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். அதேநேரம் தேசிய ஜனநாயக கூட்டணி 34.3 சதவீதமும், ஜன சுராஜ் கட்சி 12.8 சதவீதமும் ஆதரவு பெற்று உள்ளன.