பதிவு கட்டணம் 30 சதவீதம் உயர்வா?
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் பதிவுத்துறையின் வருவாயை உயர்த்தும் நோக்கத்தில் நிலத்தின் சந்தை மதிப்பை விட கூடுதலாக 30 சதவிகிதம் மதிப்பு உயர்த்தி பதிவு செய்ய வேண்டும் என பதிவுக்கு வரும் பொது மக்களிடம் வலுக்கட்டாயமாக பதிவுத்துறை சட்டதிட்டங்களுக்கு புறம்பாகவும் தான்தோன்றித்தனமாகவும் பதிவுத்துறை அதிகாரிகள் அழுத்தம் கொடுத்து பதிவு செய்ய வலியுறுத்துவதாகவும், இதனால் ரியல் எஸ்டேட் துறை அதல பாதாளத்திற்கு செல்வதோடு தேர்தல் காலங்களில் அரசுக்கு மிகப்பெரும் அவப்பெயரை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில்
செம்மொழி காவலர், தமிழ்வேள், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நல் வழியில், தமிழகத்தை நாடும் – ஏடும் – நாளும் போற்றும் வகையில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்ற முன்னோடி மாநிலமாக தமிழகத்தை மாற்றிட வேண்டி, தங்களின் தூக்கத்தை துச்சம் என கருதி, அல்லும் பகலும் அயராது உழைத்தும், சமரசம் ஏதும் இன்றி தமது உறுதியான கொள்கைகளால் இந்தியாவிலேயே முதன்மையான முதல்வராக உயர்ந்து நிற்கும் தமிழகத்தின் தரணி போற்றும் தன்னிகரற்ற முதல்வராகிய தங்களின் ஆட்சி காலத்தில் பதிவுத்துறையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல நல்ல திட்டங்களை முன்னெடுத்து செயல்படுத்தி வருவதனை அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பாக பாராட்டி வரவேற்கின்றோம்.
தமிழகம் முழுவதும் நிலங்களுக்கான சர்வே எண் மற்றும் தெருவாரியாக வழிகாட்டி மதிப்புகளை பதிவுத்துறை நிர்ணயித்து அதற்கான விவரங்களும் பதிவுத்துறையின் இணையதளமான (Tnreginet) -இல் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது தமிழகம் முழுவதும் பதிவுத்துறை அலுவலகங்களில் பதிவுத்துறையின் இணையதளத்தில் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பை விட கூடுதலாக மேலிடத்து வாய்மொழி உத்தரவு என்கின்ற பெயரில் 30% உயர்த்தி பதிவு செய்ய வலியுறுத்துவதாக மாநிலம் முழுவதிலிருந்து ரியல் எஸ்டேட் துறை சார்ந்தவர்கள், பொதுமக்கள் மற்றும் FAIRA கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என அனைத்து தரப்பினரும் தொடர்ந்து எங்கள் கூட்டமைப்பினை அணுகி புகார் தெரிவித்து வருகின்றனர்.
மேற்கண்ட வகையில் அடிப்படை காரணம் இன்றி 30% உயர்த்தி பதிவு செய்ய வலியுறுத்துவதன் காரணமாக வாங்குபவர்களின் சக்தி குறைவதுடன், வாங்குபவர்கள் அதிகப்படியான தங்களது கணக்கில் காட்டப்படும் பணத்திற்க்கு நிகராக சந்தை மதிப்பினை விட கூடுதலாக காண்பிக்க வேண்டிய நிலை ஏற்படும். அதேபோல் விற்பவர்களும் அவர்கள் விற்கக்கூடிய தொகைக்கு நிகராக மூலதன ஆதாய வரி (Capital Gain Tax) செலுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகின்றார்கள்.
மேலும் தற்பொழுது பதிவுத்துறைக்கு செலுத்தப்படுகின்ற முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணத்திற்கு கூடுதலாக 30% செலுத்த நேரிடும். இப்படி பதிவுத்துறை அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு என்கின்ற பெயரில் பதிவு அலுவலகங்களுக்கு சேவை பெறவேண்டி வரும் பொதுமக்களுக்கு இடையூறும், மிகப்பெரிய அழுத்தத்தையும் ஏற்படுத்துகின்றார்கள். இச்செயலானது ஜனநாயகத்திற்கு எதிரானதாகவும், பொதுமக்கள் நலனிற்கு எதிராக தொடுக்கப்பட்ட அப்பட்டமான அதிகார துஷ்பிரயோக செயலாகும்.
இப்படி வாய்மொழி உத்தரவு என்கின்ற சந்தை மதிப்பை விட கூடுதலாக 30% செலுத்தி பதிவு செய்ய வேண்டும் என்கின்ற தமிழக அரசின் அரசாணை மற்றும் சுற்றறிக்கை என எவ்வித முறையான வழிகாட்டுதலும் இன்றி பதிவுத்துறை அதிகாரிகளின் தான் தோன்றித்தனமான செயல்பாடுகளினால் பலரின் இல்லக் கனவுகள் நினைவாகாமல், கனவாகவே கலையக்கூடிய சூழல் உருவாவதுடன், பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினர் சொத்துக்களை விற்க முடியாத சூழலுக்கு தள்ளப்படும் பெரும் அபாயம் ஏற்படுவதன் காரணமாக பொருளாதார இழப்புக்கு உள்ளாகும் ஆபத்தையும் எதிர்கொள்ள வேண்டி வரும்.
தாங்கள் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மக்கள் நலன் வேண்டி பதிவுத்துறையில் பல நல்ல திட்டங்களை முன்னெடுத்து செயல்படுத்தி வருவது பொதுமக்கள் மத்தியில் தமிழக அரசுக்கும், தங்களுக்கும் நற்பெயரினை பெற்று தந்திருக்கிறது. இச்சூழலில் எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் வருவதை ஒட்டி தங்களின் நல்லாட்சிக்கும், நற்பெயருக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பதிவுத்துறை அதிகாரிகள் என்கின்ற போர்வையில் சில விஷக்கிருமிகள் செயல்பட்டு வருவதன் காரணமாக, பதிவுத்துறை தனது நற்பெயரை இழந்து மோசமான நிலைக்கு தள்ளப்படுவதுடன் தமிழ்நாடு அரசுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது.. இத்தகைய பதிவுத்துறை அதிகாரிகளின் செயல்பாடுகளால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதுடன், ரியல் எஸ்டேட் துறையும் அதளபாதாளத்திற்கு தள்ளப்படும் சூழல் உருவாகியுள்ளது.
ஆகவே இதனை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மேற்கண்ட பிரச்சினைகளை தங்களின் மேலான கவனத்தில் கொண்டு, இப்பிரச்சினையை களைவதற்கான உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டு, பதிவுத்துறையின் இணையதளத்தில் நிர்ணயித்திருக்கின்ற வழிகாட்டி மதிப்பிற்கு நிகராக பொதுமக்கள் பதிவு செய்யும் வண்ணம் வழிவகை செய்து, பதிவுத்துறை இதனை ஆமோதித்து பதிவு செய்வதை உறுதி செய்ய தாங்கள் வழிவகை செய்ய வேண்டுமென பொதுமக்கள் மற்றும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பாக வேண்டுகோள் விடுத்து டாக்டர் ஹென்றி முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளார்.