“தொடர்ந்து தொல்லை.. அமைச்சர் மீது பெண் எம்.எல்.ஏ. பரபரப்பு குற்றச்சாட்டு!

Loading

புதுச்சேரி ஆளுங்கட்சி பெண் எம்.எல்.ஏ. அமைச்சர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் காரைக்கால் பிராந்தியத்தில் நெடுங்காடு தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகள் சந்திரபிரியங்கா. அப்போது அவருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

ஆனால் கடந்த ஓராண்டுக்கு முன்பு அவரது பதவி திடீரென பறிக்கப்பட்டது. தற்போது அவர் நெடுங்காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.

இந்தநிலையில் அவர் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை நேற்று அவர் வெளியிட்டுள்ளார்.அதில்

சில வாரங்களுக்கு முன்பு காரைக்காலில் ஒரு ‘கட்அவுட்’ பிரச்சினை பூதாகரமாக வெடித்தது.இதன் பின்னணியில் இருப்பது ஒரு ஆளுங்கட்சி அமைச்சர் என்பது நன்றாக தெரிகிறது. நான் ஒரு அமைச்சராக இருந்தபோது பல டார்ச்சர்களை தந்தார். இப்ப எம்.எல்.ஏ.வாக இருக்கும்போது அதையும் மீறி ‘டார்ச்சர்’ கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இன்னும் சொல்லப்போனால் நான் வீட்டுக்குப் போகும் பாதையெல்லாம் உளவாளி வைத்திருக்கிறார். நான் ஒரு பாதுகாப்பான இடத்தில் இல்லை என்பதும் தெரியும்.

அதையெல்லாம் மீறி ‘பீல்’ பண்ணி ஒரு புகார் தரலாம் என ஒரு உயர் அதிகாரியை சென்று சந்தித்தால், அவர் சொல்கிறார், வேண்டுமென்றால் உங்கள் சொத்துக்களை எல்லாம் வேறு யார் பெயரிலாவது எழுதி வைத்து விடுங்கள். இதெல்லாம் சகஜம் என அவர் கூறுகிறார். முன்னாள் அமைச்சராகவும், ஒரு எம்.எல்.ஏ. ஸ்தானத்தில் இருக்கும் எனக்கே இப்படி என்றால், சாதாரண மக்களுக்கு என்ன செய்வார்கள்?.

நமக்கெல்லாம் முதலாளி மக்கள்தான். அவங்களுக்கு நல்லதை செய்ய முன் வாருங்கள். இல்லை என்னிடம் பணம் உள்ளது. நான் என்ன ஆட்டம் வேணாலும் போடுவேன் என்றால், அதற்கு நான் ஆள் இல்லை.திருப்பி திருப்பி எனக்கு தொந்தரவு செய்றீங்க. இன்னும் 8 மாதம் தான் இருக்கு தேர்தலுக்கு. அதனால் தேர்தல் வேலையை மக்கள் வேலையா பாருங்க. என்னையும் பார்க்க விடுங்க. ஒரு பெண் தானே என ஏளனமாக பார்க்காதீங்க. எல்லா தொகுதியிலும் பெண்கள் ஓட்டுதான் அதிகம். நீங்களும் வாழுங்க.. என்னையும் வாழ விடுங்கள். அவ்வளவு தான்!.இவ்வாறு அவர் பேசி இருக்கிறார்.

0Shares