தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றப்பட்டது! மரியே வாழ்க’ என முழக்கமிட்ட பக்தர்கள்!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிமய மாதா பேராலய கொடியேற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் இளம்பகவத், மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிமய மாதா பேராலயம் இத்தாலி ரோம் நகரில் அமைந்துள்ள வாடிகன் சிட்டியால் பசிலிகா அந்தஸ்து வழங்கப்பட்ட ஆலயம் ஆகும். இங்கு ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26-ந் தேதி முதல் ஆகஸ்ட் 5-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு 443-ம் ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது.விழாவினை முன்னிட்டு நேற்று மாலை பங்கு தந்தைகள் தலைமையில் கொடி பவனி நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று காலை தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் கூட்டுத் திருப்பலி முடிந்ததும் காலை 8.45 மணியளவில் பனிமயமாதா உருவம் பொறித்த கொடியை ஊர்வலமாக பங்கு தந்தைகள் கொண்டுவந்து பேராலயம் எதிரே உள்ள கொடிமரத்தில் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் பங்கு தந்தைகள், பொதுமக்கள் கொடியை ஏற்றினர்.
அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘மரியே வாழ்க’ என முழக்கமிட்டனர். மேலும் புறாக்கள் மற்றும் பலூன்கள் பறக்கவிட்டு கைகளை தட்டி தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர்.
மேலும் விழாவை முன்னிட்டு துறைமுகபகுதி கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளில் இருந்து சைரன் ஒலி எழுப்பப்பட்டது. இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் இளம்பகவத், மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் இத்திருவிழாவை முன்னிட்டு 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சி.சி.டி.வி. கேமராக்கள் பல இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது.பனிமயமாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகிற 5-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.