வெகு விமரிசியாக நடைபெற்ற உசிலம்பட்டி ஸ்ரீ நல்லம்மாள் கோவில் கும்பாபிஷேகம்..ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

Loading

ஜி. உசிலம்பட்டி ஸ்ரீ நல்லம்மாள், ஸ்ரீ சிவன், மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா வெகு விமரிசியாக நடைபெற்றது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியம் ,ஜி .உசிலம்பட்டியில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ நல்லம்மாள், ஸ்ரீ காளியம்மாள், ஸ்ரீ ராமர், ஸ்ரீ சிவன், ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில்களில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கடந்த மூன்று நாட்களாக நடந்து வரும் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் , நேற்று முன்தினம் 4 ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் ஆரம்பித்து, கணபதி, நவக்கிரக ,லட்சுமி ஹோமங்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து முளைப்பாரி தீர்த்தம் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. இரண்டாம் நாள் யாகசாலை பிரவேசம் நடைபெற்று, கோபுர கலசங்கள் ஸ்தாபிதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது .

அதனை தொடர்ந்து யாக சாலையில் பல்வேறு வேத மந்திரங்கள் ஓத, அக்னி வளர்க்கப்பட்டு ,பூர்ணாகுதி நிகழ்ச்சிகள் நடைபெற்றது .நான்கு கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, நேற்று காலை ஸ்ரீ நல்லம்மாள், ஸ்ரீ சிவன் ஆகிய கோவில் கலசங்களுக்கு 108 புண்ணிய தளங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தீர்த்தம் பக்தர்கள் மேல் தெளிக்கப்பட்டது. அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டதால் பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தனர்.இதனை அடுத்து கோவிலில் இருக்கும் தீபத்தில் பச்ச தண்ணீர் ஊற்றப்பட்டு தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தீபம் சுடர்விட்டு எரிந்ததால் பக்தர்கள் வியப்படைந்து வழிபட்டனர்.

அதனை தொடர்ந்து மாலையில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து முளைப்பாரி கரைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. முன்னதாக மூலவர்களுக்கும் ,பரிவார தெய்வங்களுக்கும் கைலாய வாத்தியம் முழங்க மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு மாபெரும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மூன்று நாள் நிகழ்ச்சிகளிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஜி. உசிலம்பட்டி போய நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த விழா குழுவினரும் கிராம மக்களும் செய்திருந்தனர்.

0Shares