11 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ போராட்டம்!

Loading

திருவள்ளூரில் ஜாக்டோ ஜியோ சார்பில் 11 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநிலத் துணைத் தலைவர் ஏ மணிகண்டன் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் மாநில தலைவர் சீ. காந்திமதி நாதன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜ. ஷேக் கபூர், பா.ராஜாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.தாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

இதில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் இரா.தாஸ், ஆர் எஸ் இளங்கோவன், ஜி பிரசன்னா, பெ.சுபாஷினி, கே.ஜி.முரளிதரன், வி.ஆர்.ஏழுமலை, ரவி உட்பட 100க்கும் மேற்பட்ட ஜாக்டோ ஜியோவினர் கலந்து கொண்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். ஆசிரியர்களின் நலனுக்கு எதிரான அரசாணை எண் 243 யை ரத்து செய்ய வேண்டும். 21 மாத ஊதிய மாற்று நிலுவைத் தொகையை அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அரசு பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டதை உடனடியாக வழங்க வேண்டும்.

அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்புவதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், முதுகலை ஆசிரியர்களுக்கும், உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் ஒன்றிய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதியை களையப்பட வேண்டும் என்பது உட்பட 11 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். முடிவில் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர் ப.ஜவஹர் போராட்டத்தை முடித்து வைத்து சிறப்புரை ஆற்றினார். ஒருங்கிணைப்பாளர் ஆர்.கணேசன் நன்றியுரை ஆற்றினார்.

0Shares