அறிவர் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் பெயிரா வாழ்த்து

Loading

ஏப்ரல் 14 தமிழர்களின் புத்தாண்டு, இதே நாள்தான் தாழ்த்தப்பட்ட  – ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட – விளிம்புநிலை மக்களின் வாழ்வில் இருளை விலக்கி ஒளியினை ஏற்றியும் மற்றும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தினை தலைமை ஏற்று இயற்றியும் பாபா சாஹேப் மதிப்பிற்குரிய தந்தை என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்களின் உதயநாள் குறித்தும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் விவரித்து செய்தி வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்தியில்

பாபா சாஹேப் அம்பேத்கர் அவர்கள் 14.04.1891 அன்று  ராம்ஜி மாலோஜி சக்பால் – பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாக, மகர் என்னும் தாழ்ப்பட்ட இனத்தில், சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாவ் எனுமிடத்தில் பிறந்தார். தன் இளமைப் பருவம் முதலே இந்தியாவில் புரையோடி கிடந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் மீதான தீண்டாமை கொடுமைகளினால் பல துன்பங்களுக்கும், இன்னல்களுக்கும், அவமரியாதைகளுக்கும் உள்ளானார்.

அக்காலத்தில் தீண்டாமை கொடுமையானது வணங்கும் தெய்வம் முதல் வசிக்கும் இடம், குடிக்கும் நீர், குளிக்கும் குளம், நடக்கும் பாதை, செய்யும் தொழில், உண்ணும் உணவு, உடுக்கும் உடை, கற்கும் கல்வி என தொடங்கி புதைக்கும் இடுகாடு வரை பரவிக் கிடந்தது. இதற்கு ஒரு உதாரணம் அம்பேத்கரின் தந்தை பிரிட்டிஷ் ராணுவத்தில் சுபேதாரராகப் பணி புரிந்தாலும் பட்டியல் இனத்தவர் என்பதால் அவரும் தீண்ட தகாதவராகவே நடத்தப்பட்டார்.

எனினும் அம்பேத்கர் பல இன்னல்களை எதிர்கொண்டு கல்விதான் ஒரு மனிதனுக்கான உரிமையை மட்டுமல்லாது ஒரு சமூகத்திற்கான விடுதலையை பெற்றுக் கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு எதற்கும் அஞ்சாமல் தனது கல்வியினை கற்க தொடங்கினார்.

அவர் படிக்கும் பள்ளியிலும் பட்டியலின மாணவர்களை அம்பேத்கர் உட்பட அனைவரையும் தனியாக உட்கார வைக்கப்பட்டனர். குடிக்கும் தண்ணீரும் அவர்கள் வீட்டில் இருந்து கொண்டுவரும் அவல நிலையும் நிலவி வந்த காலம் அது. எனினும் அம்பேத்கர் அவர்கள் கல்விதான் தன்னை வாழ்வில் உயர்த்தும் என்ற உயரிய நோக்கோடு கடின உழைப்போடு தனது கல்வியினை விடாமல் தொடர்ந்தார். அச்சம்யத்தில் அவர் குடும்பத்தினர் பம்பாய்க்கு குடி பெயர்ந்தனர்.

அங்கு அம்பேத்கர் அவர்கள் எல்பின்சுடேன் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து 1907 ஆம் ஆண்டு தனது பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பிறகு பட்டபடிப்பிற்காக பம்பாய் பல்கலைக்கழக கல்லூரியில் சேர்ந்து பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியலில் 1912 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார்.

பிறகு பரோடா மன்னரின் உதவியினால் அரசாங்க பணி கிடைக்கப்பெற்றது. ஆனாலும் தீண்டாமை என்னும் கொடுமையில் இருந்து பட்டியலின மக்களை விடுவிக்க வேண்டும் என்கின்ற எண்ணமானது அவரது நெஞ்சில் எரிதழல் என கனன்று கொண்டிருந்தது

1913 ஆம் ஆண்டு தனது பட்டப்படிப்பு முடித்த பின்னர் பரோடா மன்னர் சயாசிராவ் கெய்க்வாட் நிறுவிய திட்டத்தின் கீழ் கிடைக்கப் பெற்ற உதவித் தொகையினை கொண்டு நியூயார்க் நகரில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பில் முதுகலை கல்வி பயின்றார். 1915 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பொருளாதாரம் மற்றும் சமூகவியல் வரலாறு தத்துவம் மானுடவியல் ஆகிய பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்று, பண்டைய இந்திய வர்த்தகம் என்கின்ற தலைப்பில் தனது இரண்டாவது முதுகலை ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தார். 1916 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சட்டப் படிப்பில் சேர்ந்தார். அதேநேரம் லண்டன் பொருளாதார பள்ளியில் முனைவர் பட்டம் பெற ஆய்வு பணியாற்றத் தொடங்கினார். இந்நிலையில் திடீரென 1917 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இவருக்கு கிடைத்து வந்த உதவித்தொகையானது நிறுத்தப்பட்டதால் இந்தியா திரும்பினார். 1923-ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற அம்பேத்கர் அதே ஆண்டு சட்ட அமைப்பால் வழக்கறிஞராக அங்கீகரிக்கப்பட்டார். 1923 ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் அவர் தன் வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார்

1924- ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பிய பின் ஒடுக்கப்பட்ட மக்கள் நலனுக்கான சங்கத்தை தொடங்கி, சர் சிமன்லால் ஸ்டெதால்வத் என்பவரை தலைவராகவும், அம்பேத்கர் அவர்கள் அவைத்தலைவராகவும் இருந்தனர். தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வியறிவு, பொருளாதாரத்தை மேம்படுத்தி வாழ்வாதாரத்தை உயர்த்துவது‌ மற்றும் அவர்களுக்கான அடிப்படை உரிமைகளை பெற்று தருவது போன்றவைகள் சங்கத்தின் நோக்கங்களாக இருந்தது.

காரணம் எவ்வளவு படித்திருந்தாலும், எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், அவன் தாழ்த்தப்பட்டவன் என்றால் அவனை ஒரு மனிதனாகவே மதிக்காத சூழல் கண்டு அறிவர் அம்பேத்கர் மனம் கொதித்தார். அவர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய போதும் தாழ்த்தப்பட்டவர் என்கின்ற காரணத்தினால் பிற சமூகத்தைச் சேர்ந்த சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் பெரிதும் அவமானப்படுத்தப்பட்டார்.  உயர்கல்வி கற்றிருந்தாலும், பெரிய உத்தியோகத்தில் இருந்தாலும், பேராசிரியராக பணிபுரிந்தாலும் தீண்டாமை எனும் பெரும் தீயின் முன்பு அனைத்தும் கருகி அவமானம் ஒன்றே மிஞ்சியது.

எனவே 1927 ஆம் ஆண்டு தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக அறிவர் அம்பேத்கர் அவர்கள் தீவிரமான போராட்டங்களை முன்னெடுக்க தொடங்கினார். அனைத்து ஜாதியினரும் கோவிலில் நுழைகின்ற  உரிமை, பட்டியல் இன சமூகத்தினர் நகரின் பொது குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் எடுக்கும் உரிமைக்காக மகத் நகரத்தில் ஒரு சத்யாகிரக போராட்டத்தையும் முன்னெடுத்து நடத்தினார்.

1927 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடந்த ஒரு மாநாட்டில், சாதிய பாகுபாடு மற்றும் தீண்டாமை பாரம்பரிய இந்து நூலான மனுதரும சாத்திரத்தில்  குறிப்பிடப்பட்டுள்ள இந்து மக்களின் வாழ்வியல் முறையில் ஜாதிய பாகுபாடு மற்றும் தீண்டாமை  ஆகியவைகள்  நியாயப்படுத்தப்படுவதை பகிரங்கமாக கண்டனம் செய்ததோடு மட்டுமல்லாமல் நூலினை எரிக்கவும் செய்தார்.  இதனைத் தொடர்ந்து இவரின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும் அதன் பிரதிகளை எரித்தனர்.

ஒடுக்கப்பட்ட மக்கள் சந்தித்து வரும் மற்றும் சகித்து கொண்டிருக்கும் பிரச்சினைகளை உலகுக்கு எடுத்துரைக்க 03.04.1927 அன்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பகிஷ்கிரித் பாரத் என்ற பத்திரிக்கையினை தொடங்கினார்.   1928-ல் பம்பாய் அரசு சட்டக்கல்லூரியில் அவர் பேராசிரியரானார். பிறகு 01.06.1935 அன்று இதே கல்லூரியின் முதல்வரானார்.

1930 ஆம் ஆண்டு அம்பேத்கர் களாராம் கோயில் இயக்கத்தைத் தொடங்கினார். நாசிக் நகரில் ஏறக்குறைய 15,000 பேர் ஒன்றுகூடி ஊர்வலமாகச் சென்று கடவுளை தரிசனம் செய்ய முயன்றனர். ஆனால் இவர்களை தரிசனம் செய்ய விடாமல் உயர் குலத்தினர் தடுத்து கோயிலின் வாயில்களை மூடிவிட்டனர்.

பட்டியலின மக்களின் நலன்கள் மற்றும் பாதுகாப்புக்காக 15.08.1936 அன்று சுதந்திரத் தொழிலாளர் கட்சியை தொடங்கி. நாசிக் மாவட்டம் யேலாவில் மாகாண மாநாடு நடத்தினார். இந்த மாநாட்டில் தான், “நான் இந்து மதத்தில் பிறந்தேன். ஆனால், ஓர் இந்துவாக இறக்கமாட்டேன்” என இந்துக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் தனது அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

இந்நிலையில் 1938- ஆம் ஆண்டு தீண்டதகாதவர்கள் என்ற பெயரில் மாற்றம் செய்யும் மசோதா ஒன்றை காங்கிரஸ் அறிமுகம் செய்தது. இதனை டாக்டர் அம்பேத்கர் விமர்சித்தார். பெயரை மாற்றுவது, பிரச்சனைக்குத் தீர்வாகாது என்று கடுமையாக விமர்சித்தார். மேலும் தீண்டாமைக்கு எதிராக மற்றும் பட்டியலின மக்களின் நலனுக்காக பல போராட்டங்களை   சட்டரீதியாகவும்  தொடர்ந்து முன்னெடுத்து வந்தார்

1942- ஆம் ஆண்டு இந்திய கவர்னர் ஜெனரலின் நிர்வாக சபைக்கு தொழிலாளர் துறை உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டார். 1946-ல் வங்கத்தில் இருந்து அரசியல் நிர்ணய சபைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே காலகட்டத்தில் சூத்திரர்கள் யார்? என்கின்ற புத்தகத்தை வெளியிட்டார்.

1947- ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் முதலாவது அமைச்சரவையில் அம்பேத்கார் அவர்கள் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

ஆனால் 1951-ல் காஷ்மீர் பிரச்சனை, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, இந்து சட்ட மசோதாவில் நேருவின் கொள்கை ஆகியவற்றில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

பாபா சாஹேப்  அம்பேத்கார் அவர்களின் ஒவ்வொரு வாசகமும் பொன்னெழுத்துக்களால் பொறிக்க வேண்டியவைகளாக திகழ்கின்றன. முக்கியமாக கல்வியின் முக்கியத்துவத்தை குறித்து ஆணித்தரமாக தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.

உதாரணமாக எந்த ஒரு சமூகத்தின் முன்னேற்றமும் அந்த சமூகத்தின் கல்வியின் முன்னேற்றத்தைப் பொறுத்தது, உங்கள் மகன்கள் மற்றும் மகளுக்கு கல்வி கொடுங்கள் குலத்தொழிலில் அவர்களை ஈடுபடுத்தாதீர்கள், அறிவைத் தேடி ஓடுங்கள், நாளைய வரலாறு உங்களை நிழலாகத் தேடி ஓடிவரும், உண்மையான கல்வியானது நம்மை பயன்படுத்துவதற்கு பதிலாக பகுத்தறிவு உள்ளவர்களாக மாற்றும், நீ கற்ற கல்வியானது உன் சமூகத்திற்கு பயன்படவில்லை என்றால் நீ இருப்பதை விட இறப்பது மேல் ஆகவே கல்வி என்பது நமது பிறப்புரிமை உரிமைகள் பறிக்கப்படுவதும், மறுக்கப்படுவதும் தடுக்கப்பட வேண்டுமானால் நிச்சயம் கல்வி அனைவருக்கும் சமமாக கிடைக்க பெற வேண்டும் என கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியவர்.

மேலும் பெண்கள் முன்னேற்றத்தின் அளவைக் கொண்டு ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை நான் அளவிடுகிறேன் என்று வரியின் மூலம் பெண்களின் முன்னேற்றத்தின் முக்கியத்துவத்தை தெளிவாக உணர்த்தி உள்ளார்.

அதுபோல நல்ல புத்தகங்கள் படிப்பதைப் குறித்து குறிப்பிடும் போது, உங்களிடம் இரண்டு ரூபாய் இருந்தால் ஒரு ரூபாய் உணவுக்கும். ஒரு ரூபாய் புத்தகத்திற்கும் எடுத்துக் கொள்ளுங்கள் ஏனென்றால் உணவு நீங்கள் வாழ உதவும், ஆனால் எப்படி வாழ வேண்டும் என்பதை புத்தகம் உங்களுக்கு கற்றுக் கொடுக்கும்.

மேலும் அறிவர் அம்பேத்கர் அவர்கள் வீரத்தை குறித்து குறிப்பிடுகையில், பலிபீடத்தில் வெட்டப்படுபவை ஆடுகள்தான், சிங்கங்கள் அல்ல. சிங்கங்களாக இருங்கள் எனவும், சுய மரியாதை குறித்து குறிப்பிடுகையில், ஒரு மனிதனின் சிறந்த அடையாளம் சுய மரியாதை. இதை இழந்து வாழ்வது தான் பெரிய அவமானம் எனவும், லட்சியம் குறித்து குறிப்பிடுகையில், ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள், அதை அடைவதற்காக விடாமுயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள் எனவும், கடமை குறித்து குறிப்பிடுகையில், வெற்றியோ தோல்வியோ எது வரினும் கடமையை செய்வோம். யார் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும் நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான் எனவும், சுதந்திர மனிதன் குறித்து குறிப்பிடுகையில், எவன் ஒருவன் தானே சரணடையாமல், மற்றவர் இச்சைப்படி செயல்படாமல், எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே சுதந்திர மனிதன் என இது போல் பல கருத்துக்களை சிறப்பான வாழ்க்கைக்கான வழிமுறைகளை அறிவர் அவர்கள் தெளிவாக பதிவு செய்துள்ளார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பியான டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்கள் நவீன இந்திய வரலாற்றில் உயர்ந்த ஆளுமையாக அன்றும், இன்றும் என்றென்றும் இருந்து வருகிறார். இந்தியா முழுவதும் இன்றும் ஓங்கி ஒலிக்கும் ஜெய் பீம் என்கின்ற முழக்கம் அதிகார வர்க்கத்தின் ஆளுமையை அடக்கி ஆள்கிறது என்றால் அது மிகை ஆகாது.

டாக்டர் அறிவர் அம்பேத்கர் அவர்கள் இந்திய அரசியலில் அவர் ஆற்றிய முக்கிய பங்கு,  தீண்டாமைக்கு எதிரான போராட்டம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கான அவரின் செயல்பாடுகளை பாராட்டி கௌரவிக்கு  வகையில் இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது இவரது மறைவுக்கு பிறகு 1990 இல் வழங்கப்பட்டது.

2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சி மற்றும் சி.என்.என் – ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் அறிவர் அம்பேத்கர் அவர்கள் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பியான டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்கள் தாழ்த்தப்பட்ட – ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட – விளிம்புநிலை மக்களின் ஒளிமயமான வாழ்விற்காக தன் வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்தது மட்டுமல்லாமல், தன் வாழ்நாள் முழுவதையும் கல்வி கற்பதில் மற்றும் நூல்கள் வெளியிடுவதில் மட்டும் செலவிடாமல் அவர்களின் வாழ்க்கை மேம்பட சட்டரீதியாகவும் மற்றும் களம் கண்டும் போராடிய மாமனிதனாக திகழ்ந்தார்.   உயர் பதவி வகித்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு உயர வேண்டும் என உறுதியுடன் செயல்பட்டார்.

அறிவர் அம்பேத்கர் அவர்கள் தமது வாழ்நாளின் எஞ்சியப் பகுதியை சமத்துவம். சகோதரத்துவம், மனிதநேயம் ஆகியவற்றுக்கு அர்ப்பணித்தார். இன்றும் நமது திருநாட்டில் மேற்கொள்ளப்படும் பொருளாதார சமூக பிரச்சினைகளுக்கான தீர்வு காண அம்பேத்கர் அவர்களின் சிந்தனைகளும் செயல்பாடுகளும் முன்னோடியாய் திகழ்கிறது என்பது நிதர்சனம்,

இப்படி பல நிலைகளில் பரிணமித்து எழுத்தால், பேச்சால், சிந்தனையால், செயலால், முன்னெடுப்பால், களப்போராட்டத்தால் ஆகச்சிறந்த அரும்பெரும் தலைவராகவும், இம்மண்ணுக்கும் மக்களுக்குமான மகத்தான தலைவராகவும் திகழ்ந்த அறிவர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினத்தில் அவர் இம் மண்ணுக்கும் மக்களுக்கும் ஆற்றிய ஈடு இணையற்ற தொண்டுகளை எண்ணி, அவரை போற்றி வணங்குகிறோம்   “ஜெய் பீம்” என தனது செய்தியில் பெயிரா கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ஹென்றி குறிப்பிட்டுள்ளார்.

0Shares