சிறப்புக்கூறு நிதியை 100 சதவீதம் செலவு செய்ய வேண்டும்..அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவு.

Loading

முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவிக்கும் அனைத்து அறிவிப்புகளும் தடைகள் இன்றி உடனடியாக செயல்பாட்டுக்கு வருவதையும் உரிய காலத்தில் அவை செயல்படுத்தப் படுவதையும் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவுவிட்டுள்ளார் .

புதுச்சேரி அரசு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் ஆய்வுக்கூட்டம் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தலைமையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.துணைநிலை ஆளுநரின் செயலர் மணிகண்டன், ஆதிதிராவிடர் நலத்துறைச் செயலர் முத்தம்மா, ஆதிதிராவிடர் நலத்துறையின் இயக்குநர் இளங்கோவன் மற்றும் சிறப்புக்கூறு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் துறைகளின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக செலவிடப்படும் சிறப்புக்கூறு நிதியின் பயன்பாடு குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டது. புதுச்சேரி அரசு ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையில் திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் நதியில் 16 சதவீத நிதியை சிறப்புக்கூறு நிதியாக ஒதுக்கீடு செய்வதையும், அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் நிதி 21 அரசு துறைகள் மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படுவது பற்றி எடுத்துரைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு 92 சதவீதம் செலவிட செலவு செய்யப்பட்டதும் எடுத்துக் கூறப்பட்டது.

நடப்பு நிதியாண்டு புதுச்சேரி அரசு ஒதுக்கீடு செய்துள்ள ரூ. 502.53 கோடி சிறப்புக்கூறு நிதியின் பயன்பாடு குறித்த விவரங்களைக் கேட்டறிந்த துணைநிலை ஆளுநர், அதிகாரிகளுக்கு பின்வரும் ஆலோசனைகளை வழங்கினார்.

• புதுச்சேரி அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் சிறப்புக்கூறு நிதியை ஆண்டு இறுதியில் செலவு செய்யாமல் முறையாக திட்டமிட்டு விரிவாக செலவு செய்ய வேண்டும்.

• சிறப்புக்கூறு நிதியை 100 சதவீதம் முழுமையாக செலவு செய்ய வேண்டும். அவ்வாறு செலவு செய்யப்படும் நிதி முழுமையாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்காக மட்டுமே செலவு செய்யப்படுகிறதா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் சிறப்புக்கூறு நிதி முறையாக செலவு செய்யப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு தேவையான அடிப்படை உள்கட்டமைப்புகள் வசதிகள் குறிப்பாக, சாலை வசதி, மின்விளக்கு, தரமான குடிநீர் போன்ற வசதிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

• கல்வி சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்பதால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தங்கி பயிலும் மாணவர் விடுதிகளின் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கழிவறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளோடு பிற வசதிகளை மேம்படுத்துவதையும் உறுதி செய்ய வேண்டும்.
• சிறப்புக்கூறு நிதியை ஆதிதிராவிட நலத்துறை மட்டுமல்லாமல் பிற அரசுத் துறைகளும் பயன்படுத்தவதால் துறைகள் இடையிலான ஒருங்கிணைந்த செயல்பாடு இருக்க வேண்டும். ஒதுக்கீடு செய்யப்படும் நிதி எந்த வித குறைபாடும் இல்லாமல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் நலனுக்காக முழுமையாக செலவு செய்வதில் முனைப்பு காட்ட வேண்டும்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கான குடியிருப்பு வசதிகள் மற்றும் கடன் திட்டங்களை விரிவுபடுத்த வேண்டும். அவர்களுக்கு அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் நலன் குறித்து தொடர் ஆலோசனை நடத்த வேண்டும். வரும் நிதிநிலை அறிக்கையில் அவர்களுக்கான கூடுதல் திட்டங்களைக் கொண்டுவர வேண்டும்.

• முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவிக்கும் அனைத்து அறிவிப்புகளும் தடைகள் இன்றி உடனடியாக செயல்பாட்டுக்கு வருவதையும் உரிய காலத்தில் அவை செயல்படுத்தப் படுவதையும் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

 

0Shares