சாலையோர வியாபாரிகளுக்கு இறுதி வாய்ப்பு.. சென்னை மாநகராட்சி கெடு!
சென்னை:
சென்னையில் சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை சிறப்பு முகாம் வரும் 28-ம் தேதி வரை நடைபெறஉள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-பெருநகர சென்னை மாநகராட்சியில், சாலையோர வியாபாரிகளுக்கான வாழ்வாதாரம் மேம்படுத்துதல் மற்றும் விற்பனையை ஒழுங்குமுறைப்படுத்துதல் சட்டம், திட்டம் மற்றும் விதிகளை பின்பற்றி நகர விற்பனைக்குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.
மேலும் சென்னை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளின் விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்காக சிப் பொருத்திய கியூஆர் கோடு மற்றும் இணைய இணைப்பு பயன்பாடுடன் கூடிய புதிய அடையாள அட்டை வழங்குவதற்கு நகர விற்பனை குழுவின் 24.01.2025 அன்று நடைபெற்ற 9-வது கூட்டத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு வழங்கப்படாமல் உள்ள அடையாள அட்டைகளை பெறுவதற்கு 27.01.2025 முதல் 15.02.2025 வரை அந்தந்த மண்டலத்திற்குட்பட்ட வார்டு அலுவலகங்களில் வழங்க உத்தரவிடப்பட்டது என தெரிவித்துள்ளார் , மேலும் 13.02.2025 வரை 4,253 அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, இதுவரை மொத்தம் 24,573 அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
இந்தநிலையில் மீதமுள்ள 6,567 அடையாள அட்டைகள் வழங்க கடைசி வாய்ப்பாக மீண்டும் 16.02.2025 முதல் 28.02.2025 வரை அந்தந்த மண்டலத்திற்குட்பட்ட வார்டு அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வியாபாரிகளுக்கான புதிய அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்றும் மேலும், 28.02.2025க்குள் பெற்றுக்கொள்ளாத சாலையோர வியாபாரிகளின் அடையாள அட்டைகள் ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது என கூறியுள்ளார்.
எனவே, இந்த இறுதி வாய்ப்பினை சாலையோர வியாபாரிகள் பயன்படுத்தி பழைய அடையாள அட்டைகளை ஒப்படைத்து ஓ.டி.பி. வாயிலாக புதிய அடையாள அட்டைகளை அந்தந்த வார்டுகளில் 28.02.2025 வரை நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களில் அலுவலக வேலை நாட்களில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் அதில் கூறப்பட்டுள்ளது.