வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொறிக்கும் பணி : மாவட்ட தேர்தல் அலுவலர் த பிரபு சங்கர் ஆய்வு
திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொறிக்கும் பணி : மாவட்ட தேர்தல் அலுவலர் த பிரபு சங்கர் ஆய்வு :
திருவள்ளூர் ஏப் 11 : திருவள்ளூர் மாவட்டம்,ஆவடி பட்டாபிராம் தர்மமூர்த்தி ராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்து கல்லூரி, பூவிருந்தவல்லி வட்டாட்சியர் அலுவலகம், திருவள்ளூர் செயிண்ட் ஆனிஸ் மேல்நிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான த பிரபு சங்கர் மக்களவைத் தேர்தல் -2024 முன்னிட்டு திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொறிக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்திய தேர்தல் ஆணையம் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாட்டிற்கு வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கான (தனி) கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்திலும் , பொன்னேரி டாக்டர் எம்.ஜி.ஆர் மீன் வளக் கல்லூரியிலும், ஆவடி பட்டாபிராம் தர்மமூர்த்தி ராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்து கல்லூரி, பூவிருந்தவல்லி வட்டாட்சியர் அலுவலகம், மாதவரம் வட்டாட்சியர் அலுவலகம், திருவள்ளூர் செயிண்ட் ஆனிஸ் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொறிக்கும் பணி இன்று முதல் நடைபெற்று வருகின்றது .
இப்பணி முடிந்தவுடன் மின்னணு வாக்கு உதவி இயந்திரங்கள் பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையில் வைக்கப்பட்டு அறை சீல் வைக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் த.பிரபு சங்கர் தெரிவித்தார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், ஆவடி மாநகராட்சி ஆணையர் ஷேக் அப்துல் ரகுமான், மகளிர் திட்ட இயக்குனர் செல்வராணி, பூவிருந்தவல்லி உதவி தேர்தல் அலுவலர் கற்பகம், உதவி ஆணையர் கலால் ரங்கராஜன், திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் அலுவலர் தனலட்சுமி,வட்டாட்சியர்கள் விஜயகுமார் (ஆவடி) , கோவிந்தராஜன் (பூவிருந்தவல்லி) வாசுதேவன்(, திருவள்ளூர்), மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.