காச நோய் கண்டறிதல், ஆயுஷ்மான் அட்டைப் பதிவு, உடல்நலப் பரிசோதனை ஆகியவை தர்மபுரியில்
காச நோய் கண்டறிதல், ஆயுஷ்மான் அட்டைப் பதிவு, உடல்நலப் பரிசோதனை ஆகியவை தர்மபுரியில் நடைபெறும் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் முக்கிய அம்சங்களாகும்
2025-க்குள் காச நோய் ஒழிப்புக்கான அரசின் முயற்சியை இந்த யாத்திரை வலுப்படுத்துகிறது
ஐநா உறுப்பு நாடுகள் மற்றும் உலக சுகாதார அமைப்பால் நிர்ணயிக்கப்பட்ட உலகளாவிய இலக்கிற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னதாக, அதாவது 2025-க்குள் காச நோய் ஒழிப்பு என்ற லட்சிய இலக்கை மத்திய அரசு கொண்டுள்ளது. இந்த லட்சியத்தை நிறைவேற்ற அனைத்து நிலையிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த வகையில் காச நோய் ஒழிப்புக்கான அரசின் முயற்சிகளை வலுப்படுத்துவது தர்மபுரியில் நடைபெற்று வரும் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் முக்கிய நோக்கமாக உள்ளது.
இந்த யாத்திரையில் நடமாடும் எக்ஸ்ரே சோதனை வாகனங்கள் மூலம் ஒவ்வொரு ஊராட்சியிலும் நோயாளிகளுக்கு காச நோய் கண்டறியும் சோதனை நடத்தப்படுகிறது. சளி பரிசோதனை செய்யப்பட்டு காச நோய் இருப்பதற்கான சந்தேகம் ஏற்பட்டால் அவர்கள் உயர்நிலை மருத்துவமனைகளுக்குச் செல்ல பரிந்துரைக்கப்படுகின்றனர். காச நோய் பாதிப்புக்கு ஆளான, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள நோயாளிகள் நிக்ஷய் மித்ரா மூலம் உதவி பெறுவதற்கு பிரதமரின் காச நோய் இல்லா இந்தியா திட்டத்தின்படி அவர்களிடம் ஒப்புதல் பெறப்படுகிறது. காச நோய் பாதித்த ஒவ்வொரு நோயாளிக்கும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் நிக்ஷய் போஷன் திட்டத்தின் கீழ் நேரடிப் பயன் பரிமாற்றத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.500 ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது. இந்த உதவியைப் பெறுவதற்கு நிலுவையில் உள்ள பயனாளிகளின் வங்கிக் கணக்குகள் சேகரிக்கப்பட்டு வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான லட்சிய யாத்திரை நடைபெறும் இடங்களிலேயே அவை ஆதாருடன் இணைக்கப்படுகின்றன. இதுவரை இந்த யாத்திரையின்போது தர்மபுரி மாவட்டத்தில் 5,984 பேருக்குக் காசநோய் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த யாத்திரையின்போது ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் அட்டைக்கான பதிவும் நடத்தப்படுகிறது. இதற்காகவே நியமிக்கப்பட்டுள்ள சுகாதாரத்துறை அலுவலர்களின் உதவியுடன் ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகியவற்றின் அளவு கணக்கிடப்பட்டு தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகளும் செய்யப்படுகின்றன.
சுகாதார சேவைகள் தவிர பிரதமரின் உஜ்வாலா திட்டத்திற்கான பதிவு, ஆதார் விவரங்களை புதுப்பித்தல், இந்திய அஞ்சல் துறை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளால் நிர்வகிக்கப்படும் பல்வேறு கணக்குகளை தொடங்குதல் உள்ளிட்ட அரசின் இதர வசதிகளை பெறுவதற்கான வாய்ப்புகளும் இந்த யாத்திரையில் வழங்கப்படுகின்றன. வேளாண் துறையில் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய நடைமுறைகள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைப்பதில் வேளாண் அறிவியல் மையம், சென்னை உரத் தொழிற்சாலை ஆகியவை முன்னணியில் உள்ளன.
மத்திய அரசு சேவைகளின் பயன்களை பெறுவதற்கான வாய்ப்பாக இந்த யாத்திரையைப் பயன்படுத்திக் கொள்ள பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். வளர்ச்சியடைந்த இந்தியா லட்சிய யாத்திரை வரும் நாட்களில் எங்கெங்கு செல்லும் என்பது பற்றிய விவரத்தை https://viksitbharatsankalp.gov.in/public-events என்ற இணையதளத்தில் காணலாம்.