மாற்றுத்திறனாளிகள் உற்பத்தி செய்யும் கைவினைப் பொருட்களை மக்கள் அதிகளவில் வாங்கி அவர்களை ஊக்குவிக்க வேண்டும்
மாற்றுத்திறனாளிகள் உற்பத்தி செய்யும் கைவினைப் பொருட்களை மக்கள் அதிகளவில் வாங்கி அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திருமிகு பிரதிமா பௌமிக் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த அமைச்சகத்தின் சார்பில் நடத்தப்படும் திவ்ய கலா மேளா என்ற கண்காட்சியை சென்னையில் இன்று (17.11.2023) அவர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் 274 மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் மூலம் ரூ.2.75 கோடி கடனுதவியை அவர் வழங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்களையும் அமைச்சர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய இணையமைச்சர் பிரதிமா பௌமிக், மாற்றுத்திறனாளி கைவினைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் உற்பத்திப் பொருட்கள் கொண்ட கண்காட்சியை நாடு முழுவதும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை நடத்தி வருவதாக தெரிவித்தார். தில்லி, மும்பை, குவகாத்தி, போபால், செகந்திராபாத், பெங்களூரூ, ஜெய்ப்பூர், வாரணாசி, இந்தூர் ஆகிய ஒன்பது நகரங்களில் ஏற்கனவே இந்த கண்காட்சி நடைபெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். பத்தாவதாக தற்போது சென்னையில் இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்பது கண்காட்சிகளில் 9 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகளின் திறன்களை மேம்படுத்தி அவர்களை தொழில்முனைவோராக்குவதற்கு அரசு பல ஊக்கத் திட்டங்களை செயல்படுத்துவதாகவும் அவர் கூறினார். மாற்றுத்திறனாளிகள் தற்சார்புடையவர்களாக மாற வேண்டும் என்ற நோக்கில் அரசு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் மிகக்குறைந்த வட்டியில் பல்வேறு கடன் திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு 3 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இதே போல் கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையான அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி என்பதன் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டுக்காக சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் செயல்படுவதாக இணையமைச்சர் திருமிகு பிரதிமா பௌமிக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் தேசிய மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் நிறுவனமான நிப்மட் (NIPMED) இயக்குநர் திரு நசிக்கேதா ரௌத், தேசிய மாற்றுத்திறனாளிகள் நிதி மற்றும் மேம்பாட்டுக்கழகமான என்டிஎஃப்டிசி-ன் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநரான திரு நவீன் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சென்னை திருவான்மியூர் சிஇஆர்சி வளாகத்தில் உள்ள கண்காட்சி மைதானத்தில் இன்று (17.11.2023) தொடங்கி 10 நாட்கள் இந்த கண்காட்சி நடைபெறுகிறது. இதில் 18 மாநிலங்களைச் சேர்ந்த 87 மாற்றுத்திறனாளி கைவினைஞர்கள் தங்களது உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளனர். கண்காட்சி நிறைவில் சிறந்த விற்பனையாளர் மற்றும் சிறந்த வாங்குவோர் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படவுள்ளன.