வழிகாட்டி மதிப்பில் உள்ள குளறுபடிகளை உடனடியாக சரிசெய்ய டாக்டர். ஆ.ஹென்றி கோரிக்கை
வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளருக்கு பெயிரா கூட்டமைப்பின் தலைவர் டாக்டர்
ஆ.ஹென்றி கடிதம்!.
தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் அவர்களுக்கு அகில இந்திய ரியல்
எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் – தேசியத் தலைவர் டாக்டர். ஆ.ஹென்றி அவர்கள்,
நன்றி தெரிவித்தும், கோரிக்கை விடுத்தும் கடிதம் எழுதியுள்ளார்.
மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் 2021- 2022 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில்
பதிவுத்துறையில் பின்பற்றப்படும் சொத்துக்களுக்கான சந்தை வழிகாட்டி மதிப்பினை
சீரமைப்பது சம்பந்தமாக சில அறிவிப்பினை வெளியிட்டார்.
அந்த அடிப்படையில் சந்தை வழிகாட்டி மதிப்பினை சீரமைக்க வேண்டியும், கள நிலவரம்
பற்றி ஆராய்ந்து வழிகாட்டி மதிப்பினை நிர்ணயிப்பதற்கான வழிமுறைகளை
பரிந்துரைப்பதற்காகவும். இரு அடுக்குகளுடன் (முதல் அடுக்கு – உயர்மட்ட குழு: இரண்டாம்
அடுக்கு- வழிகாட்டும் குழு) கூடிய குழுக்களை அமைத்து அதில் சந்தை வழிகாட்டி மதிப்பு
சீரமைப்புக்குழு அமைக்கப்பட்டு, அதன் முதல் அடுக்கு உயர்மட்ட குழுவின் தலைவராக
முனைவர்.தேவஜோதி ஜெகராஜன், இ.ஆ.ப.(ஓய்வு) அவர்களை நியமனம் செய்து வணிகவரி
மற்றும் பதிவுத்துறை சார்பில் அரசாணை எண்.81(தேதி19.04.2023) ஆக
வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 09.06.2017 அன்று குறைக்கப்பட்ட 33 சதவீதம் வழிகாட்டி மதிப்பினை திரும்ப
பெற்று, கடந்த 08.06.2017 அன்று இருந்த சந்தை மதிப்பை நிர்ணயித்து சட்டசபையில்
அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதில் 09/06/2017 க்கு பிறகு புதிதாக மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்ட மனைகளுக்கு
08/06/2017 அன்று இருந்த வழிகாட்டி மதிப்பை விட அதிகபட்சமாக நிர்ணயம்
செய்யப்பட்டிருந்தால், அவற்றினை மேலும் உயர்த்த கூடாது என்கிற அடிப்படையில் அந்த
அறிவிப்பு அமைந்திருந்தது.
ஆனால் பதிவுத்துறை இணையதளத்தில் கடந்த 01/04/2023 முதல் 09.06.2017 க்கு பிறகு
மனையாக வழிகாட்டி மதிப்பை நிர்ணயம் செய்த இனங்களுக்கும், 50 சதவீதம் உயர்த்தி ஒரே
சீராக வழிகாட்டி மதிப்பினை பதிவுத்துறை இணையதளத்தில் பதிவேற்றம்
செய்யப்பட்டுள்ளது..
இதனை தாங்கள் உடனடியாக கவனத்தில் கொண்டு, வழிகாட்டி மதிப்பில் உள்ள
குளறுபடிகளை உடனடியாக சரி செய்வதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்
எனவும்,
மேலும் இரண்டாம் அடுக்கு வழிகாட்டும் குழுவிற்கு விரைவில் தலைவரை நியமித்து
வழிகாட்டி மதிப்பில் உள்ள சிக்கல்களை களைந்திட வேண்டுமெனவும், மேலும் இப்படிப்பட்ட
குழுக்களில் அரசு அதிகாரிகளுடன் எங்களைப் போன்ற ரியல் எஸ்டேட் சங்கங்களின்
பிரதிநிதிகளையும், அந்தந்த பகுதியில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளையும் உறுப்பினர்களாக
இணைத்து, சந்தை வழிகாட்டி மதிப்பில் உள்ள பிரச்சனைகளை களைவதற்கும்,
சீரமைப்பதற்குமானமுத்தரப்பு குழு ஒன்றை அமைப்பதற்கு ஆவண செய்ய வேண்டும்
எனவும் வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதி உள்ளார்.