ராகுல் காந்தி அவதூறு வழக்கு
ராகுல் காந்தி அவதூறு வழக்கு: பாட்னா நீதிமன்ற உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை
பாட்னா, ஏப்.25-
மோடி பெயர் குறித்து சர்ச்சையில் ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை மே 15-ம் தேதி வரை நிறுத்தி வைத்து பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2019-ம் ஆண்டு மோடி என்ற பெயர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தது தொடர்பாக பிஹார் முன்னாள் துணை முதல்வரும் மாநிலத்தின் மூத்த பாஜக தலைவருமான சுஷில் குமார் மோடி, ராகுல் காந்திக்கு எதிராக பாட்னா கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது ஏப். 12-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ராகுலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், சுஷில் குமார் ஷிண்டே தனக்கு எதிராக தாக்கல் செய்த மனு மீது கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி ஏப்.22-ம் தேதி ராகுல் காந்தி பாட்னா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி சந்தீப் குமார், ஏற்கனவே இதே காரணத்திற்காக மனுதாரர் குஜராத் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருக்கிறார். அதே காரணத்திற்காக மீண்டும் விசாரணை நடத்த முடியாது” என்று தெரிவித்தார்.
வழக்கு குறித்து ராகுல் காந்தி தரப்பு வழக்கறிஞர் வீரேந்திர ரத்தோர் கூறுகையில்,”வழக்கினை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தோம். ஏற்கெனவே இதே விஷயம் தொடர்பாக சூரத் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று விசாரணையில் இருக்கும் போது, அதே காரணத்திற்காக வேறு ஒரு நீதிமன்றத்தில் விசாரணை நடத்த முடியாது. இது சட்டவிரோதமானது. அடுத்த விசாரணை மே 15-ம் தேதி நடக்க இருக்கிறது. அதுவரை கீழமை நீதிமன்றத்தின் அனைத்து உத்தரவுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், சுஷில் குமார் மோடி தரப்பு வழக்கறிஞர் எஸ்.டி. சஞ்சய் கூறுகையில்,”இந்த விவகாரத்தில் நாங்கள் எங்கள் தரப்பு விளக்கத்தை மே 15ம் தேதி தெரிவிக்க வேண்டும், அதுவரை வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது” என்றார்.
கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி என்ற பெயர் குறித்து, ராகுல் காந்தி பேசியது தொடர்பாக அவர் மீது சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நான்கு ஆண்டுகள் கழித்து கடந்த மார்ச் மாதத்தில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது இதனால் ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, அவர் வசித்துவந்த அரசு பங்களாவை காலி செய்யும்படி, நாடாளுமன்ற செயலகம் ராகுலிடம் தெரிவித்திருந்தது. இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் வசித்து வந்த டெல்லி துக்ளக் வீதியில் உள்ள அரசு பங்களாவை ராகுல் காந்தி சனிக்கிழமை காலி செய்தார். அதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள தனது தாயார் சோனியாவின் பங்களாவில் அவர் வசித்து வருகிறார். இதுகுறித்து “உண்மையை பேசியதற்கான பலனை அனுபவிக்கிறேன்” என்ற ராகுல் தெரிவித்திருந்தார்.