சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் :
திருவள்ளூர் அடுத்த கொப்பூர் கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தை காலி மதுப்பாட்டில் பிரிக்கும் இடமாக பயன்படுத்துவதோடு, அரசு விடுதி அருகே பன்றி கொட்டகை அமைத்துள்ளதால் மாணவர்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட சமூக ஆர்வலர் லோகநாதன் என்பவர் கலெக்டரிடம் புகார் தெரிவித்திருந்தார்.இங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 450-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அந்த வளாகத்திலேயே அரசு மாணவர் விடுதியும் செயல்பட்டு வருகிறது.
அதன் அருகிலேயே அருகே சமுதாயக் கூடம், விளையாட்டு திடல், கால்நடை நீர் அருந்தும் இடம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் மக்கும், மக்காத குப்பைகள் பிரிக்கும் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஊராட்சியில் இவைகள் எந்தெந்த நோக்கத்திற்காக அமைக்கப்பட்டதோ , அதற்கு பயன்படுத்தாமல் வேறு சட்ட விரோத உபயோகங்களுக்கு அங்குள்ள சிலர் பயன்படுத்தி வருவதாகவும் பொது மக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள சமுதாய கூடத்தை மதுப்பாட்டில்கள் சேகரித்து வைக்க பயன்படுத்துவதாகவும், மது பாட்டில்களை திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக அமைக்கப்பட்டுள் ள மக்கும், மக்காத குப்பைத் தொட்டியில் கொட்டி தரம் பிரித்து மூட்டை கட்டவும் பயன்படுத்துவதாகவும், அதேபோல் விளையாட்டு மைதானம் பகுதியில் கொட்டகை அமைத்து பன்றிகளை வளர்த்து வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் உள்ளதாகவும் ஊராட்சி தலைவரிடம் புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அந்த கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் லோகநாதன் என்பவர் புகார் மனு அளித்தார்.
இந்த புகாரின் பேரில் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானது. இதனையடுத்து கொப்பூ ர் கிராமத்திற்கு அவப் பெயர் ஏற்படுத்திவிட்டதாக கூறி ஊராட்சிமன்றத் தலைவர் பூங்கொடி என்பவரின் சகோதரர் டி.கோபால் மற்றும் அவரது ஆதரவாளர்களை ஒன்று திரட்டி, அவர்கள் சுற்றி உட்கார்ந்திருக்க கிராமத்தில் நிலவும் அவலங்களை சுட்டிக்காட்டிய சமூக ஆர்வலர் லோகநாதனை நிற்க வைத்து வலுக்கட்டாயமாக மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் அரங்கேறியது. இந்நிலையில் ஊராட்சி மன்றத் தலைவரின் சகோதரர் டி.கோபால் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் , தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மீண்டும் இன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் புகார் மனுவை அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.