கேஸ் சிலிண்டர் குடோனுக்கு தடை விதிக்க கோரி பொதுநல வழக்கு
கொடைக்கானல் தாலுகா பண்ணைகாடு கிராமத்தில் கட்டிட அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டிடத்தில், உரிமம் பெறாமல் “சட்டவிரோதமாக” செயல்பட்டு வந்த கேஸ் சிலிண்டர் குடோனுக்கு தடை விதிக்க கோரி பொதுநல வழக்கு ! திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம், பண்ணைக்காடு கிராமம், 9-வது வார்டு கவுன்சிலர் திருமதி.த.வனிதா என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பது,
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள எனது ஊரான பண்ணைக்காடு கிராமத்தில் எப்போதும் அதிக வெயில், அதிக குளிர் இல்லாமல் தட்பவெட்ப நிலை சீராக காணப்படும் பகுதி, இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் எங்கள் கிராமத்தில் நிலம் வாங்கவும் அதில் வீடுகள் கட்டவும், பண்ணைகள் அமைக்கவும் ஆர்வம் காட்டி வருகின்றனர், . ஆகவே எங்களது ஊரில் கட்டிடம் கட்டுவதற்கான விதிகளை பண்ணைக்காடு பேரூராட்சி, கவனமுடன் பின்பற்றி செயல்படுத்தி வருகின்றது. இந்நிலையில் எங்கள் கிராமத்தின் பிரதான சாலை அருகில் சுமார் 20 செண்ட் பரப்பளவு கொண்ட விவசாய நிலத்தில் கட்டிடம் கட்டப்பட்டு அதை கேஸ் சிலிண்டர்கள் சேமிக்கும் குடோனாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் மேற்படி கட்டிடம் கட்ட, DTCP அனுமதி, மற்றும் கட்டிட வரைபட அனுமதியும் முறையாக பண்ணைக்காடு டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலரிடம் பெறவில்லை. மேலும் மேற்படி கட்டிடத்தில் கேஸ் சிலிண்டர்கள் சேமித்து வைப்பதற்கு, பெட்ரோலியம் மற்றும் வெடிபொருட்கள் கூடுதல் தலைமை கட்டுப்பாட்டு அதிகாரியிடம் உரிமம் பெறவில்லை. மேற்படி சட்டவிரோத செயல்களால் தீ விபத்துக்கள் ஏற்படவும் இதனால் பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை எனவே சட்டவிரோதமாக கட்டப்பட்ட மேற்படி கட்டிடத்தை இடிக்க உத்தரவிட வேண்டும் என்று இந்த மனுவில் கூறபட்டிருந்தது.இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது அரசு வக்கீல் ஆஜராகி மனுதாரர் குறிப்பிடும் கட்டிடத்திற்கு எந்த ஒரு அனுமதியும் அரசு தரப்பில் வழங்கப்படவில்லை என தெரிவித்தார். இதனை அடுத்து நீதிபதிகள் இந்த வழக்கு குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியாளர் மற்றும் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பின் கூடுதல் தலைமை கட்டுப்பாட்டு அதிகாரி உள்ளிட்டோர் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணையை மூன்று வாரத்துக்கு ஒத்தி வைத்தனர். இதேபோல் மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் எழில் கொஞ்சும் சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடங்களை கண்டறிந்து சீல் வைக்க வேண்டும் என்று ஏற்கனவே உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதன் பேரில் சுமார் 1600-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சீல் வைக்கப்பட்டது என்றும் தற்போது மேற்படி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறி நகராட்சி அதிகாரிகளின் துணையோடு தற்போது சட்டவிரோதமாக நூற்றுகணக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன என்றும் தற்போதும் தொடர்ந்து கட்டப்பட்டு வருகின்றன என்றும் இந்த அனுமதி இல்லா கட்டிடங்களை உடனடியாக அகற்றி மலைகளின் இளவரசியின் இயற்கை எழிலை காப்பாற்ற வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களும் இயற்கை நல விரும்பிகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். கொடைக்கானல் செய்தியாளர் ஜெய்