திருவண்ணாமலையில் மின்விளக்குகளால் ஜொலிக்கும் அருணாசலேஸ்வரர் கோவில் 9 கோபுரங்கள்
திருவண்ணாமலையில்
மின்விளக்குகளால் ஜொலிக்கும்
அருணாசலேஸ்வரர் கோவில் 9 கோபுரங்கள்
திருவண்ணாமலை, நவ.25: திருவண்ணாமலையில் வருகிற டிசம்பர் 6ந் தேதி நடைபெறவுள்ள கார்த்திகை தீபத்திருவிழாவையட்டி அருணாசலேஸ்வரர் கோவில் 9 கோபுரங்களுக்கு மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 27ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக காவல் தெய்வங்களின் 3 நாள் வழிபாடு நடக்கிறது. அதன்படி துர்க்கையம்மன் உற்சவம் நேற்றிரவு விமர்சையாக நடந்தது. விழாவை முன்னிட்டு சின்னகடை வீதியில் பவழக்குன்று அருகே உள்ள துர்க்கையம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் நடந்தது. வண்ண சரவிளக்குகளால் கோவில் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இரவு 9 மணியளவில் காமதேனு வாகனத்தில் துர்க்கையம்மன் மாடவீதியில் பவனிவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார் 2ம் நாளான இன்று பிடாரிஅம்மன்உற்சவம் நடைபெறவுள்ளது. நாளை இரவு சிம்ம வாகனத்தில் பிடாரி அம்மன் பவனி வருகிறார். நேற்றிரவு முதல்நாள் வழிபாடு நிகழ்ச்சி தொடங்கியது. தீபத்திருவிழாவுக்கான கொடியேற்றம் வரும் 27ந் தேதி அதிகாலை 5.30 மணிமுதல் 7 மணிக்குள் நடைபெறுகிறது. அன்றுமுதல் தினமும் காலை இரவு வேலைகளில் வெவ்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெறும். டிசம்பர் 6ந் தேதி அதிகாலை கோவிலில் 4 மணிக்கு மூலவர் சன்னதியில் பரணி தீபமும் அன்று மாலை 6 மணிக்கு கோவில் பின்புறமுள்ள 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். காவல்தெய்வங்களின் வழிபாட்டை தொடங்குவதற்கு முன்னதாக அருணாசலேஸ்வரர் கோவிலின் 9 கோபுரங்களுக்கு மின் விளக்கு அலங்காரம் செய்யப்படுவது வழக்கம் அதன்படி கோவிலின் கோபுரங்களுக்கு மின் விளக்கு அலங்காரம் செய்ய்பபட்டு மின் விளக்குகள் எரியவைக்கப்பட்டுள்ளது.