பழனிமலை படிக்கட்டுக்களை முட்டிப்போட்டு தரிசனம்: பணி நிலைக்க டாஸ்மாக் ஊழியர் நூதனபோராட்டம்
சென்னை,அக்- 29
பணிநிரந்தரம் வேண்டி பழனி மலை படிக்கட்டுகளை முட்டிப்போட்டு ஏறும் நூதன போராட்டத்தை டாஸ்மாக் ஊழியர் நடத்தியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
மதுரையைச் சேர்ந்த வெங்கடசுப்பரமணியன் என்பவர் மதுரையில் டாஸ்மாக் விற்பனையாறராக பணியாற்றி வருகிறார். பி.காம் பட்டதாரியான இவர் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காததால் டாஸ்மாக்கில் விற்பனையாளராக பணியில் சேர்ந்தார். கடந்த 19 ஆண்டுகளாக தொகுப்பூதியப் பணி நிரந்தரம் செய்யப்படாமல் நீண்டு கொண்டு செல்லும் நிலை அறிந்து மனம் மிக வருந்தினார்.
மேற்கண்ட பணி நிரந்தரக் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குறைந்த பட்சம் 20% போனஸ் வழங்கப்படும் என நம்பிக்கை கொண்டிருந்தார். மாநிலத்தில் அமைந்துள்ள புதிய ஆட்சியும் 10% போனஸ் வழங்கி, டாஸ்மாக் பணியாளர்களின் நிலையை உணர்வு பூர்வமாக பரிசீலனை செய்ய தவறியதை அறிந்து மிகவும் மன உளைச்சல் அடைந்தார்.
இதனை முன்னிட்டு புதிய மார்க்கம் தனக்கு தானே கண்டு பிடித்து பழனி முருகன் தரித்து கோரிக்கையை கூறி, நிறைவேற்றித் தர வேண்டுமென விரதம் இருந்து நேற்று காலை பழனி மலை நெடிய படிக்கட்டுகளை முட்டி போட்டு ஏறிக் கடந்து முருகப்பெருமானை அடைந்து அவரிடம் தனது கோரிக்கையை கூறுவது எனும் நூதனப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
அவரது முயற்சிக்கு தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் தன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. அவரது முயற்சிக்கு பழனி மலை முருகன் செவி மடுத்தாலும் மடுக்கா விட்டாலும் முதல்வர் ஸ்டாலினின் கவனத்தை ஈர்க்கும் என நம்புகிறோம். என தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் பொது செயலாளர் பால்பாண்டியன் நம்பிக்கை தெரிவித்தார்