தமிழக சட்டபேரவை நாளை கூடுகிறது ஓபிஎஸ் இருக்கை குறித்து பரபரப்பு முடிவு
சென்னை, அக்- 15
எதிர்க்கட்சித்துணைத்தலைவர் ஓபிஎஸ் இருக்கை எங்கே என்பது குறித்து நாளை கூடவிருக்கும் சட்டபேரவையில் பரபரப்பான முடிவெடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது
தமிழக சட்டபேரவை நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது, இந்த கூட்டத்தில் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. உறுப்பினர்களின் மவுன அஞ்சலிக்கு பின்னர் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது, இதனைத்தொடர்ந்து அனைத்துக்கட்சியினர் அடங்கிய அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் கூடுகிறது, இதில் பேரவைக்கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும், துணை பட்ஜெட் தாக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது, இதற்கிடையில் அதிமுக தரப்பில் எதிர்க்கட்சித்துணைத்தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை நியமித்து எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி , சபாநாயகருக்கு கடிதம் கொடுத்துள்ளார், மேலும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினராகவும் நியமிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமைக்கழகமான எம்ஜிஆர் மாளிகையில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெறுகிறது.
அதிமுகவில் ஓபிஎஸ்- இபிஎஸ் பிளவுக்கு பின்னர் நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடர் என்பதால் எதிர்க்கட்சித்துணைத்தலைவர் ஓபிஎஸ் பதவி குறித்து பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று வருகிறது, ஆனால் சபாநாயகர் , பேரவை நடக்கும்போது அது விவகாரம் பற்றி தெரியும் என்றும் இருக்கை பற்றி முடிவு செய்வது தனது தனி உரிமை என்றும் கூறி வருகிறார், மேலும் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருமே முன்னாள் முதலமைச்சர்களாக இருந்தவர்கள் என்றும் அவர்களுக்கு அவையின் மாண்புகள் பற்றி தெரியும் என்றும் கூறியுள்ளதால் நாளை சட்டபேரவையில் எதிர்க்கட்சித்துணைத்தலைவர் ஓபிஎஸ் இருக்கை குறித்து சபாநாயகர் மேற்கொள்ள போகும் முடிவு பற்றி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான விவாதங்கள் நிலவி வருகின்றன
மேலும் ,சட்டபேரவையில் ஜெயலலிதா மரணம் குறித்த நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் இந்த அறிக்கையின் அடிப்படையில் சசிகலா, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் மீது நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் முக்கிய முடிவுகள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது ஆன்லைன் ரம்மி தடை குறித்து சட்டமசோதாவும் எதிர்வரும் சட்டபேரவையில் முன்வைக்கப்படும் என்று தெரிகிறது, மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு மற்றும் பரந்துார் விமான நிலைய விவகாரம் ஆகியவை குறித்து இந்த அவையில் பரபரப்பான விவாதங்கள் இடம் பெறலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது