திருவள்ளூர் அருகே மகனை கடித்த 2 பாம்புகளுடன் தந்தை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்ததால் பரபரப்பு :
திருவள்ளூர் அக் 09 : திருவள்ளூர் அடுத்த கொல்லகுப்பம் கிராமத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மகனை கடித்த கடித்த கட்டுவிரியன் மற்றும் கண்ணாடி விரியன் இரண்டு பாம்புகளுடன் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கையில் எடுத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த கொல்ல குப்பம் கிராமத்தில் வசித்து வரும் மணி-எல்லம்மாள் தம்பதியினரினருக்கு ஏழு வயது நிரம்பிய முருகன் என்ற மகன் உள்ளான்.
கூலித் தொழிலாளிகளான இவர்கள் அதே பகுதியில் வேலை செய்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல அவர்களுடைய வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் கண்ணாடி விரியன் மற்றும் கட்டுவிரியன் பாம்பு என இரண்டும் மகன் முருகனை கடித்துவிட்டு மகன் மேலே படுத்து இருந்ததை கண்டு தந்தை மணி அதிர்ச்சி அடைந்தார்.உடனடியாக அந்த இரண்டு பாம்புகளையும் அடித்து கையில் எடுத்துக் கொண்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கு முதல் சிகிச்சைப் பெற்று மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கையில் 2 பாம்புகளையும் எடுத்துக் கொண்டு தன் மகனுடன் சிகிச்சைக்கு வந்துள்ளார். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து சிறுவன் முருகன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு பெரியபாளையம் அடுத்த ஆரணியில் சகோதரர்கள் 2 பேரை பாம்பு கடித்து அதில் ஒருவன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.