கோலப்பன்சேரி பகுதியில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்
கோலப்பன்சேரி பகுதியில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் : மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார் :
திருவள்ளூர் செப் 23 : திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோலப்பன்சேரி பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக நடைபெறும் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்து, அம்முகாமில் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யும் பணிகளை பார்வையிட்டு பேசினார்.
பருவ காலத்தில் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் தாக்கம் மற்றும் புளு காய்ச்சல் ஆகியவற்றின் தாக்கம் அதிகரித்து கொண்டிருக்கிறது என்ற வகையில் 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெறுகிறது. இன்று ஒரு நாள் தமிழ்நாடு முழுவதிலும் சென்னையில் 100 என்கின்ற அளிவிலேயும், தமிழ்நாடு முழுவதிலும் 900 என்கின்ற வகையிலும் ஒட்டுமொத்தமாக 1000 என்ற அளவில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடைபெற தொடங்கியிருக்கிறது.
இன்றைக்கு 353 நபர்கள் இந்த பாதிப்புக்குள்ளானவர்கள் தற்போது இருக்கிறார்கள். இதில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் 294 நபர்களாவர். குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் 9 பேர் மட்டுமே H1 N1 பாதிப்புள்ளானவர்கள் சிகிக்சை பெற்று வருகிறார்கள். தனியார் மருத்துவமனைகளில் 285 நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆக மொத்தம் 294 பேர் தமிழகத்தில் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் 59 பேர். ஒட்டுமொத்தமாக இன்றைக்கு H1 N1 பாசிட்டிவ் என்ற வகையில் தற்சமயம் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் 353 இருக்கிறது. இந்த 353 பேரில் வயது வாரியான பாதிப்பு எனும்போது 5 வயதுக்குள்ளான குழந்தைகளுக்கான பாதிப்பு 53 பேருக்கும், 5 முதல் 14 வயதினருக்கான பாதிப்பு 61 பேருக்கும், 15 வயது முதல் 65 வயதினருக்கான பாதிப்பு 167 பேருக்கும், 65 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கான பாதிப்பு என்ற வகையில் 72 பேருக்கும் என மொத்தமாக 353 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில்,கோலப்பன்சேரி என்ற கிராமத்தில் இந்த காய்ச்சல் சிறப்பு முகாமை தொடங்கி வைத்திருக்கிறோம்.திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 168 இடங்களில் இந்த முகாம்கள் இன்றைக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மூன்றுக்கும் மேற்பட்ட பாதிப்புகள் எங்கு இருந்தாலும் அதாவது ஒரு தெருவில் இருந்தாலும் சரி, ஒரு கிராமத்தில் இருந்தாலும் சரி அங்கு உடனடியாக இந்த காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தப்படும். அதேபோல தொடர்ச்சியாக பள்ளி ஆசிரியர்களுக்கு சொல்லியிருப்பது என்பது தங்கள் வகுப்புகளில் இருக்கிற அல்லது தங்களது பள்ளியில் இருக்கிற மாணவர்களுக்கு காய்ச்சலோ, இருமலோ, சளியோ அல்லது உடல்வலி சோர்வு உள்ளிட்ட ஏதாவது ஒரு உபாதை இருந்தால் உடனடியாக அவர்களை, அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, வீட்டுக்கு அனுப்பி வைத்திட வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு முககவசம் அணிந்து 3-4 நாட்களுக்கு பாதுகாப்பாக வைத்திருப்பது நல்லது. பள்ளிகளை பொறுத்தவரை பள்ளி சிறார் நலன்குழுக்கள் காலையில் இரண்டு பள்ளிகள், மாலையில் இரண்டு பள்ளிகள் என தொடர்ச்சியாக அந்த நடமாடும் மருத்துவ வாகன குழுக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 168 இடங்களில் இதுபோன்ற முகாம்களை காலையில் ஒன்று, மாலையில் ஒன்று எனவும், பள்ளிகளில் சென்று காலையில் இரண்டு பள்ளிகள், மாலையில் இரண்டு பள்ளிகள் எனவும் ஆய்வு செய்ய மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அனைத்து தனியார் மருத்துவமனைகளில் பாதிப்பு இருந்தாலோ அல்லது கொரோனா நோய் தொற்று பாதிப்பு இருந்தாலோ அவர்கள் அரசு நி;ர்வாகத்திற்கு தகவல் சொல்ல வேண்டும்.காய்ச்சல், இருமல், தலைவலி, உடல்வலி என அறிகுறி இருந்தால் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அந்த பரிசோதனைகளில் எடுக்கப்படும் முடிவுகளில் தான் ர்1 N1 பாதிப்பா அல்லது புளுவா என கண்டறிந்து அதற்கேற்றார்போல சிகிச்சை அளிக்கப்படும். அதிகபட்ச சிகிச்சை என்பது பாதிப்புக்குள்ளானவர்களை 3-4 நாட்கள் வீடுகளில் தனிமைபடுத்திகொள்ள வேண்டும் என்பது தான் என்று கூறினார்.
இதில் சுகாதாரத்துறை அரசு முதன்மை செயலாளர் ப.செந்தில்குமார்,மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, துணை இயக்குநர்கள் (சுகாதாரப்பணிகள்) செந்தில்குமார், ஜவஹர்லால் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.