உழைக்கும் மகளிரை தேடி பிடித்து கட்சிப்பதவிகளை வாரி வழங்குகிறார்: அமைச்சருக்கு கனிமொழி பாராட்டு
சென்னை, ஜூலை- 1
திமுகவில் உழைக்கும் மகளிரை தேடி தேடி பிடித்து பதவிகளை வாரி வழங்குபவர் அமைச்சர் சேகர்பாபு என்று அக்கட்சியின் மகளிர் அணி செயலாளர் கனிமொழி பாராட்டு தெரிவித்தார்
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவையொட்டி அன்பை பொழிந்த மேகம் அறிவை வளர்த்த ஆகாயம் என்ற தலைப்பில் வடசென்னை கிழக்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது, ஓய்எம்சிஏ அரங்கத்தில் நடைபெற்ற இந்த கருத்தரங்கத்திற்கு திமுக மகளிர் அணி மாநில செயலாளரும் நாடாளுமன்ற திமுக துணைத்தலைவருமான கனிமொழி கலந்துகொண்டு பேசினார், அப்போது அவர் பேசுகையில் சென்னை மேயராக ப்ரியா ராஜன் பதவியேற்ற முதல் நாளில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றேன், அப்போது பார்த்த மேயரை விட இப்போது நிர்வாகத்திறன் மிக்கவராக பாராட்டக்கூடியவகையில் மேயர் ப்ரியா இருக்கிறார் என்பதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன், திமுகவில் மகளிர் அணியில் பொறுப்பில் இருக்கும் மகளிர் உயர்வடைவதற்கும் உழைக்கும் மகளிருக்கு வாய்ப்பு பெறுவதற்கு சண்டை போட வேண்டியிருக்கிறது, ஆனால் கட்சியில் உழைக்கும் மகளிருக்கு அமைச்சர் சேகர்பாபு தேடித்தேடி பிடித்து வாய்ப்பு தந்திருக்கிறார், அவரது மாவட்டத்திற்கு வருவது மகிழ்ச்சியளிக்கிறது, எதிர்க்கட்சியாக இருந்து போராட்டங்களில் பங்கேற்ற மகளிர் அணியினர் பெருமளவில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்கு பெரும் பங்காற்றியுள்ளனர்,
கலைஞர் முதல்வராக இருந்தபோது தான், மாவட்டந்தோறும் மருத்துவக்கல்லுாரிகள் அமைக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது, அந்த திட்டத்தின் காரணமாக தான் இந்தியாவிலேயே அரசு மருத்துவக்கல்லூரிகள் தமிழகத்திற்கு கிடைத்திருக்கின்றன, தமிழகம் உயர்கல்வித்துறையில் உயர்ந்து நிற்பதற்கு காரணமாக இருப்பவரும் கலைஞர் தான், 2030 ஆம் ஆண்டில் உயர்கல்வியில் 50 விழுக்காட்டை எட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது, ஆனால் நாம் அதை தாண்டி விட்டோம், அதற்கு மூலக்காரணமாக இருப்பவர் கலைஞர் அதை தான் திராவிட மாடல் ஆட்சி என்கிறோம்,
கலைஞர் முதலமைச்சராக இருந்த போது அறிவாலயத்தில் அவரை பார்க்க வந்தவர், என்னை உனக்கு ஞாபகம் இருக்கிறதா என்று கேட்டார், நாங்களே முதல்வர் கலைஞரை நீ நான் என்று அழைக்கிறாரே என்று ஒரு கணம் ஆடி போனோம், ஆனால் முதலமைச்சராக இருந்த கலைஞர் அடுத்த கணம் உன்னை ஏன் தெரியாது என்று கூறி அவரை பெயர் கூறி அழைத்து நான் உன்னுடைய ஊருக்கு வந்தபோது பொதுக்கூட்டத்தில் தேடி தேடி பார்த்தேன் நீ இல்லையே என்று அவரிடம் கூறினார், அந்த தொண்டரும் ஆமாம் நான் அப்போது வரவில்லை உண்மை தான், உறவினர் ஒருவர் இறந்து போனதால் அங்கே போக வேண்டியிருந்தது, என்று கூறினார், அந்த அளவுக்கு தொண்டர்களிடம் அன்பை பொழிந்த மேகமாக இருந்தவர் கலைஞர். ஒருமுறை ஒரு தொண்டரை கடிந்து பேசிய கலைஞர் தான் செய்தது தவறு என்று உணர்ந்ததும் அவரிடமே மன்னிப்பு கேட்டார், அத்தகைய பெருந்தன்மை மிக்க தலைவர் கலைஞர் என்றார், இன்று மகளிருக்கு சமமான சொத்துரிமை வழங்கி பெண்ணுரிமையை பாதுகாத்தவர் கலைஞர், நம்முடைய மக்களை கோவிலின் கருவறைக்குள் செல்லும் வகையில் அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் கொண்டு வந்தவர், அந்த திட்டத்தை நிறைவேற்றி கலைஞரின் கனவுகளை நிறைவேற்றி வருகிறார் முதல்வர் ஸ்டாலின் . கலைஞரின் திட்டங்களை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று கனிமொழி வலியுறுத்தினார், சென்னை கிழக்கு மாவட்ட திமுக மகளிர் அணி செயலாளர் சுதா தீனதயாளன் தலைமையிலான இந்த விழாவில் மகளிர் அணியை சேர்ந்த 600 பேருக்கு தலா ரூ 10 ஆயிரம் நிதி உதவியும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன, நிகழ்ச்சியில் மேயர் ப்ரியா ராஜன், எம்எல்ஏக்கள் பரந்தாமன்,வெற்றியழகன்,ஜோசப்சாமுவேல்,தாயகம் கவி மாவட்ட அவைத்தலைவர் ஏகப்பன், மாவட்ட துணைச்செயலாளர் புனிதவல்லி எத்திராஜன் மாநகராட்சி சுகாதார நிலைக்குழு தலைவர் சாந்தகுமாரி, மண்டலக்குழுத்தலைவர்கள் சரிதா மகேஷ்குமார், ஸ்ரீராமுலு ஜெயன், மற்றும் ராஜேஸ்வரி ஸ்ரீதர், சாவித்ரி வீரராகவன் ஆகியோர் கலந்துகொண்டனர்,