கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.11,500 கோடி கடன் வழங்கத் திட்டம்: நெல்லை ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்!
நெல்லை.ஜூன்.19
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.11,500 கோடி கடன் வழங்க திட்டம் உள்ளதாக நெல்லையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பெயரில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர்கடன் வழங்கல், உர விநியோகம் மற்றும் கூட்டுறவு துறையின் இதர செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர்.
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் இல.சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.அப்துல் வகாப், ரூபி ஆர்.மனோகரன், பி.இராஜா, பழனி நாடார், எஸ்.சதன் திருமலைக்குமார், ஜீ.வி.மார்க்கண்டேயன், சண்முகையா, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு வரவேற்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி கூட்டுறவு சங்கங்களில் புதிய உறுப்பினர்களை சேர்த்திடவும், விண்ணப்பிக்கும் அனைவருக்கும் எந்தவித அரசியல் பாகுபாடு இன்றி கடன் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் கடையின் மூலம் வழங்கப்படும் அரிசி தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஒரு வேளை தரம் குறைந்த அரிசி ரேஷன் கடைக்கு வந்தால் அதனை நிறுத்தி வைத்துவிட்டு நல்ல அரிசியை பெற்று வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரத்தை அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப வழங்க வேண்டும். குறிப்பிட்ட உரத்தை வாங்க யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. விவசாயிகள் விண்ணப்பிக்கும் அனைத்து வகை விவசாயக் கடன்களையும் கூட்டுறவு சங்கங்கள் வழங்க வேண்டும். இதற்காக நடப்பு ஆண்டிற்கு தமிழக அரசு ரூ.11 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். முடிவில் திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள் நன்றி கூறினார்