தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் பெயரில் போலி பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கிய வழக்கில் மேலும் 2 நபர்கள் கைது.
சென்னை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் திரு.பி.நந்தகுமார், இ.ஆ.ப., அவர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர், அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் பெயரில் போலி பணி ஒதுக்கீடுஆணை நகல் வந்ததாகவும், அந்த போலியான நகல் தயாரித்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்குமாறு அனுப்பப்பட்ட மனு சம்மந்தமாக, மத்திய குற்றப்பிரிவு, மரபுசார் குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப, அவர்கள் உத்தரவின்பேரில், மத்திய குற்றப்பிரிவு, மரபுசார் குற்றப்பிரிவு (Conventional Crime) உதவி ஆணையாளர் திரு.எஸ்.செல்வகுமார் தலைமையில் காவல் குழு அமைக்கப்பட்டு, காவல் குழுவினர் மேற்கொண்ட விசாரணையில், சென்னையைச் சேர்ந்த நாகேந்திரராவ், வ/54 மற்றும் அவரது நண்பர் ஞானசேகர், வ/43 ஆகியோர் சேர்ந்து திருமதி.பத்மாவதி, க/பெ.ரமணன், ராமாபுரம் சென்னை மற்றும் செம்பியத்தைச் சேர்ந்த சாஹிரா ஆகியோர்களிடம் TNPSC Group II Serviceல் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.6 லட்சம் பெற்றுக் கொண்டு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் பெயரில் போலி பணி ஒதுக்கீடடு ஆணை வழங்கி ஏமாற்றி மோசடி செய்தது தெரியவந்ததின்பேரில், குற்றவாளிகள் நாகேந்திரராவ் மற்றும் ஞானசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
மேலும், மத்திய குற்றப்பிரிவு, மரபுசார் குற்றப்பிரிவு (Conventional Crime) உதவி ஆணையாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான ரமணி (எ) வெங்கடாச்சலம், வ/58, த/பெ.சுப்ரமணி, மந்தைவெளி மற்றும் தேவன் (எ) தேவராஜ், வ/63, த/பெ.பெருமாள், பட்டாபிராம் ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து புகார்தாரர்களிடம் மற்றும் மற்றவர்களிடம் ஏமாற்றிய வகையில் ரூ.5 லட்சம் பணம், 5 சவரன் தங்க நகைகள் மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் கைது செய்யப்பட்ட ரமணி (எ) வெங்கடாச்சலம் என்பவர் போலி பணி நியமன ஆணைகளை தயார் செய்து, தபால் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பியதும், தேவன் (எ) தேவராஜ் என்பவர் தலைமைச் செயலகத்தில் அரசு வாகன ஓட்டுநராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்தது.விசாரணைக்குப் பின்னர் 2 குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.இது போன்ற மோசடி பேர்வழிகளிடம் தங்களது பணத்தை கொடுத்து ஏமாறாது பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்படுகிறது.
******