சேலம் மாவட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் சரபங்கா வடிநிலத்தில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டம்: மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் நேரில் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு:
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் உபரி நீரை சரபங்கா வடி நிலத்தில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டப்பணிகள் ரூபாய் 565 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றது. போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வரும் இப் பணிகளை சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் தொடர்ந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி, திப்பம்பட்டி பகுதியில் அந்த திட்டத்தின் ஒரு பகுதியான குழாய் பதிக்கும் பணி களையும் தலைமை நீரேற்று நிலையம் கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: சேலம் மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வரலாற்று சிறப்புமிக்க இந்த, வறண்ட 100 ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டமானது கடந்த மார்ச் மாதம் நான்காம் தேதி முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களால் அடிக்கல் நாட்டி, துவக்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இதற்கான அனைத்து பணிகளும் முழுவீச்சில் துரிதமாக நடைபெற்று வருகின்றன. மேட்டூர் வட்டம், கோனூர் ஊராட்சி, திப்பம்பட்டி பகுதியில், இத்திட்டத்திற்கான குழாய் பதிக்கும் பணிகள் மற்றும் தலைமை நீரேற்று நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 12 பொதுப்பணித்துறை ஏரிகள், ஒரு நகராட்சி, 4 பேரூராட்சி மற்றும் 83 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மேலும் குட்டைகள் என மொத்தம் 100 ஏரிகளின் பாசன பரப்பான 4238 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெற உள்ளன.
இது மட்டுமல்லாமல் அந்த பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயரும். இதன் மூலம், சேலம் மாவட்டத்தின் வறட்சி பகுதிகளான நங்கவள்ளி, வனவாசி, மேச்சேரி, தாரமங்கலம், எடப்பாடி, சங்ககிரி, மற்றும் கொங்கணாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகளில் நீர் நிரப்பப்பட உள்ளன. இதுவரை இத்திட்டத்திற்காக விவசாயிகளின் முழு ஒத்துழைப்போடு வழங்கிய நிலத்தினால் ஆறு கிலோமீட்டர் தூரம் குழாய் பதிக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பொட்டனேரி மற்றும் எம். காளிப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 114 தனியார் நில உரிமையாளர்களின் பட்டா நிலங்களுக்கான அரசின் இழப்பீட்டுத் தொகை சுமார் ரூபாய் 5 கோடி அந்தந்த தனியார் நில உரிமையாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், மேட்டூர் சார் ஆட்சியர் சரவணன், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார தலைவர் சரபங்கா வடிநில கோட்ட உதவி பொறியாளர் வேத நாராயணன், மேட்டூர் வருவாய் வட்டாட்சியர் திருமதி சுமதி உட்பட தொடர்புடைய அதிகாரிகள் உடன் இருந்தனர்.