கோவை மாநகர ஆணையரிடம் மனு

Loading

கோவையில் பட்டப்பகலில் பயங்கரம், தனது அலுவலகத்தை 20 பேர் கும்பல் சூறையாடி சாமி சிலைகள் திருடி சென்றதாக கோவை மாநகர காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்!
கோவையில் பட்டப்பகலில் 20 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து, சிசிடிவி கேமராக்கள் மற்றும் பூஜை அறையை அடித்து நொறுக்கி, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சாமி சிலைகளைத் திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் உள்ளூர் போலீசார் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகக் கூறி, பாதிக்கப்பட்ட நபர் கோவை மாநகர காவல் ஆணையரகத்தில் இன்று பரபரப்பு புகார் மனு அளித்துள்ளார்.
கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஆர்.மணிகண்டன் (வயது 52). இவருக்கு தெலுங்குபாளையம் பகுதியில் சொந்தமாகக் கட்டிடம் மற்றும் காலி இடம் உள்ளது. இந்த வளாகத்தில் ஆன்மீக பூஜை அறை மற்றும் அவரது அலுவலகம் இயங்கி வருகின்றன. மேலும், சினிமா தயாரிப்பு நிறுவனம், துணிக்கடை, டீக்கடை உள்ளிட்டவையும் வாடகை அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. தனது குடும்ப அவசரப் பணத் தேவைக்காக மணிகண்டன், விமல் என்பவரிடம் குறிப்பிட்ட இடத்தின் ஒரு பகுதியை அடமானம் வைத்து பைனான்ஸ் முறையில் பணம் பெற்றுள்ளார். ஆனால், கொடுக்கல்–வாங்கல் கணக்கில் விமல் தரப்பில் அநியாய வட்டி கேட்டுத் தகராறு செய்யப்பட்டதால் இருவருக்கும் இடையே கடும் பிரச்சனை எழுந்தது. இதுதொடர்பாக கோவை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மணிகண்டன் தொடுத்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ள சூழலில், விமலும் அவரது தந்தை பாஸ்கரனும் சமரசம் பேசுவதாகக் கூறி மணிகண்டனை அணுகியுள்ளனர். அப்போது சுமுக உடன்பாடு எட்டப்படாததால் ஆத்திரமடைந்த இருவரும், “நீதிமன்ற வழக்கிற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்; ரவுடி வழியில் அடியாட்களை வைத்து இடத்தை பிடுங்கிக் கொள்வோம்” என்று மணிகண்டனுக்குப் பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், இன்று காலை சுமார் 8 மணியளவில் விமல் தலைமையில் வினீத் மற்றும் மாற்று மதத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கூலிப்படையினர் பயங்கர ஆயுதங்களுடன் மணிகண்டனின் அலுவலக வளாகத்திற்குள் அத்துமீறிப் புகுந்தனர். அங்கு தங்கியிருந்த கண்ணன் என்பவரது ஊழியர்களைக் கண்மூடித்தனமாக அடித்து விரட்டிய அந்தக் கும்பல், குற்றச் செயல்களுக்கு ஆதாரம் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த 5-க்கும் மேற்பட்ட சிசிடிவி (CCTV) கேமராக்களைச் சுத்தியலால் சுக்குநூறாக அடித்து நொறுக்கியது.
தொடர்ந்து கட்டிடத்தின் பிரதான பூட்டை உடைத்து உள்ளே புகுந்த அடியாட்கள், அங்கிருந்த ஆன்மீக பூஜை அறையை அடித்துத் தரைமட்டமாக்கிப் பொருட்களைச் சூறையாடியதாக ஆணையரிடம் மனு அளித்தார்.
0Shares