ஈரோடு மாநகராட்சி குப்பைதரம்பிரித்தல்விழிப்புணர்வு

Loading

ஈரோடு திண்டல் கீதாஞ்சலி பள்ளியில் மாநகராட்சி சார்பில் குப்பை தரம் பிரித்தல் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்பு
ஈரோடு மாநகராட்சி மண்டலம் 3, வார்டு எண் 30-க்கு உட்பட்ட திண்டல் பகுதியில் அமைந்துள்ள கீதாஞ்சலி அகில இந்திய மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளிடையே திடக்கழிவு மேலாண்மை மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மண்டலம் 3 சுகாதார ஆய்வாளர் அருண்குமார் தலைமை தாங்கினார்; அவருடன் தூய்மைப் பரப்புரையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் இணைந்து மாணவ-மாணவிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை மற்றும் குப்பைகளைத் தரம் பிரிப்பது குறித்து விரிவான விளக்கங்களை அளித்தனர். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், பேக்கிங் ஷீட்டுகள், தெர்மோகோல் பொருட்கள், பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்டவற்றைத் தவிர்த்து, அதற்கு மாற்றாக பாக்கு மட்டை, துணிப் பைகள், சணல் பைகள், எவர்சில்வர் பாத்திரங்கள் போன்ற இயற்கை சார்ந்த பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், வீடுகளில் உருவாகும் கழிவுகளை ‘எனது குப்பை, எனது பொறுப்பு’ என்ற உணர்வோடு ஈரக்கழிவு, உலர்கழிவு, சுகாதார கழிவு மற்றும் சிறப்பு கழிவுகள் என நான்கு வகைகளாக முறைப்படி தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளியைச் சேர்ந்த சுமார் 500 மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளி வளாகத்திற்கு நேரில் வருகை தந்து மாணவ-மாணவிகளுக்குப் பயனுள்ள வகையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்திய ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்திற்கும், வருகை தந்த மாநகராட்சி அதிகாரிகளுக்கும் கீதாஞ்சலி பள்ளியின் முதல்வர் சுப்புலட்சுமி தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்
0Shares