தொட்டபுரம் ஆஞ்சநேயர் அறக்கட்டளை அன்னதானம்
![]()
ஈரோட்டில் தலமலை தொட்டபுரம் ஆஞ்சநேயர் கோவில் அறக்கட்டளை சார்பில் 22-வது மாதமாக 1500 பேருக்கு அன்னதானம்
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள தலைமலை தொட்டபுரம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற 46 அடி உயர ஸ்ரீ ருத்ர ஜெய வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் அறக்கட்டளை மற்றும் ஈரோடு தினசரி காய்கறி சந்தை நண்பர்கள் இணைந்து மாதந்தோறும் அமாவாசை நாளில் ஏழை எளிய மக்களுக்கு தொடர்ச்சியாக அன்னதானம் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் 22-வது மாதமாக புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு மாபெரும் அன்னதான நிகழ்வு வெகுசிறப்பாக நடைபெற்றது. ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்வை பூபதி ஆயில் மில் உரிமையாளர் ஆறுமுகம் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு உணவுகளை வழங்கித் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அம்மன் கேலண்டரிங் மில் உரிமையாளர் சுப்ரமணியம், லக்காபுரம் பவர் கட் உரிமையாளர் பாலாஜி, முருகன் டெக்ஸ் கொத்துக்காரர் சண்முகசுந்தரம், வழக்கறிஞர் நவமணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர். ஸ்ரீ ருத்ர ஜெய வீர ஆஞ்சநேயர் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் அறங்காவலர்கள் முன்னின்று ஒருங்கிணைத்த இந்த அன்னதான நிகழ்வில், ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட் வளாகத்தில் 1500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சுவையான நான்கு வகை சாதங்களுடன் அன்னதானம் பரிமாறப்பட்டது. மேலும் ஈரோடு கொங்கலம்மன் கோவில் வீதி மற்றும் தலைமலை தொட்டபுரம் ஆஞ்சநேயர் கோவில் வளாகம் ஆகிய இடங்களிலும் பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் விரிவான முறையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

