ஈரோடு நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய ஆர்ப்பாட்டம்
![]()
ஈரோடு:நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தியும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்யக் கோரியும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் காந்தி சிலை அருகே மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் சித்திக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைமை கழக பேச்சாளர் கோவை சையது கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின் போது நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தலைமை கழக பேச்சாளர்,
மத்திய அரசு அவகாசம் கேட்டு போராட்டத்தை முடித்து விடலாம் என நினைக்கிறது, ஆனால் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரையிலும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரையிலும் மனிதநேய மக்கள் கட்சியின் இந்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.
மேலும் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து மறைந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் .
நீட் தேர்வு பயத்தில் உள்ள மாணவர்களுக்கு உளவியல் ரீதியான பாடங்களை மத்திய அரசு நடத்த முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், எந்த ஒரு மாணவனும் உயிரிழக்கக் கூடாது என்பதால் நீட் தேர்வு அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்பதே மனிதநேய மக்கள் கட்சியின் கோரிக்கை என்று கூறினார்.

