டிஜிபி மகேஷ்குமார்அகர்வால்IPSக்கு ஹென்றி வாழ்த்து

Loading

 

தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனராக (DGP) பொறுப்பேற்றுள்ள மகேஷ் குமார் அகர்வால், IPS அவர்களுக்கு அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர்.ஆ.ஹென்றி அவர்கள் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“தமிழக காவல்துறை என்பது நாட்டிலேயே மிகச் சிறந்த காவல்துறைகளில் ஒன்றாக திகழ்ந்து வரும் பெருமைக்குரிய அமைப்பாகும். ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையான திறமையும் செயல்திறனும் கொண்ட காவல்துறையாக தமிழக காவல்துறை பல்வேறு காலகட்டங்களில் தனது திறனை நிரூபித்துள்ளது.

புதிய காவல்துறை தலைமை இயக்குனராக பொறுப்பேற்றுள்ள மகேஷ் குமார் அகர்வால் அவர்களின் அனுபவம், நிர்வாகத் திறன் மற்றும் நேர்மையான அணுகுமுறை தமிழக காவல்துறையை மேலும் வலுப்படுத்தும் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது.

காவல்துறையின் பணி குற்றங்கள் நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பது மட்டுமல்ல; குற்றங்கள் நடைபெறுவதற்கு முன்பே அவற்றை தடுப்பதுதான் உண்மையான காவல் நிர்வாகத்தின் வெற்றி. அந்த வகையில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், இணையவழி மோசடிகள், சமூக விரோத செயல்கள் உள்ளிட்ட அனைத்து குற்றங்களையும் முன்கூட்டியே தடுத்து நிறுத்தும் நவீன காவல் நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும்.

குறிப்பாக தமிழகத்தின் எதிர்கால தலைமுறையை சீரழித்து வரும் போதைப்பொருள் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். போதைப்பொருள் உற்பத்தி, கடத்தல், விற்பனை மற்றும் பயன்பாட்டில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி, ‘போதை இல்லா தமிழகம்’ என்ற இலக்கை நனவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்கள், குழந்தைகள், சிறுமிகள் மற்றும் முதியோர்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள், துன்புறுத்தல்கள் மற்றும் மனிதநேயமற்ற குற்றங்கள் மீது பூஜ்ய சகிப்புத்தன்மை கொள்கையுடன் செயல்பட்டு, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் எந்த சாதி, மதம், இனம், மொழி அல்லது அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நம்பிக்கையை காவல்துறை உறுதிப்படுத்த வேண்டும்.

அதேபோல், தவறு செய்பவர்கள் பொதுமக்களாக இருந்தாலும், காவல்துறை அதிகாரிகளாக இருந்தாலும் உடனடி மற்றும் வெளிப்படையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதுவே காவல்துறையின் மீது பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும்.

காவல்துறை மற்றும் பொதுமக்கள் இடையே நல்லுறவு வளர்த்திடவும், காவல் நிலையங்களை மக்கள் நம்பிக்கையுடன் அணுகும் சேவை மையங்களாக மாற்றிடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், முதலீட்டு சூழல், ரியல் எஸ்டேட் வளர்ச்சி மற்றும் சமூக அமைதிக்கு வலுவான சட்டம்-ஒழுங்கு அமைப்பு மிகவும் அவசியமானதாகும். பாதுகாப்பான தமிழகம் உருவானால் மட்டுமே முதலீடுகளும் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும்.

எனவே, புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் அவர்களின் தலைமையின் கீழ் தமிழக காவல்துறை குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு அரணாகவும், சமூக விரோத சக்திகளுக்கு எச்சரிக்கை மணியாகவும் விளங்கி, மீண்டும் நாட்டின் முன்னணி காவல்துறையாக உயர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

0Shares